பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தமிழ் இலக்கிய வரலாறு


இறைவன் எழுந்தருளியிருக்கும் அவ்வூரின் சிறப்பினைப்பற்றியும் எழுந்த நூல்கள் தலபுராணமாய் முகிழ்த்தன. தனிப்பாடல்களும் எழுந்தன. இத்துறையில் முன்னின்ற புலவர் பெருமக்களுள் சிலரைக் காண்போம்.

சிதம்பரத்தில் சைவ வேளாளர் குலத்தில் திருமலைநாதர் தோன்றினார்; இளமையிலே பிரசங்கம் செய்யும் ஆற்றல் காரணமாகப் 'புராண' என்ற அடைமொழியினைப் பெற்றார்: மதுரைச் சொக்கலிங்கப் பெருமான்மீது சொக்க நாதருலாவினை இயற்றினார். சிதம்பரத்தலப் பெருமை கூறும் சிதம்பர புராணமும் இவர் செய்ததே. இவர் மைந்தர் பரஞ்சோதியார் 'சிதம்பரப் பாட்டியல்' என்னும் இலக்கண நூலினைச் செய்துள்ளார். மானா மதுரையை அடுத்த வேம்பத்தூரில் மாதவபண்டிதர் மரபிலே செவ்வைச் சூடுவார் என்ற பெரியார் தோன்றித் திருமால்மீது ஆராத அன்பு கொண்ட காரணத்தினால் வடநூலில் திருமால் சரிதையைக் கூறும் பாகவத புராணத்தைத் தமிழில் பாடினார்; 4970 திருவிருத்தங்கள் கொண்ட இந்நூல், ஓசை நயத்தினையும், மேன்மேலும் படிக்கத் தூண்டும் போக்கினையும் கொண்டு திகழ்கிறது.

அரிகண்ட புரத்தில் திருவேங்கடமுடையாரின் இரண்டாம் மகனாராகப் பிறந்தவர் அரிதாசர் என்பவர். இவர் அக் காலத்தே தமிழகத்தை ஆண்ட கிருட்டிண தேவராயரிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கினார். இவர் இருசமய விளக்கம் என்னும் நூலினை இயற்றி, நாகலாபுரம் கருமாணிக்க வண்ணன் கோயிலில் அரங்கேற்றினார். வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் சைவசமயப் பற்று நிரம்பிய குடும்பத்திலே நிரம்பவழகிய தேசிகர் பிறந்தார்; சிவஞான சித்தியாரின் சுபக்கத்திற்கு அரியதோர் உரை எழுதினார். திருப்பரங்கிரிப் புராணமும் சேது புராணமும் இவர் இயற்றியனவே. இலக்கண