பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழ் இலக்கிய வரலாறு


கங்கைக் கரையில் அமைந்துள்ள காசிநகரின் பெருமையைக் கூறும் 'காசிகாண்டம்' என்னும் நூலையும் இவர் செய்துள்ளார். படிக்கப்படிக்க இன்பம் தரும் கூர்ம புராணத்தினையும், மொழிபெயர்ப்பு நூலான இலிங்க புராணத்தினையும், சிறுவர்களுக்காக நறுந்தொகை எனும் வெற்றிவேற்கையினையும் இவர் இயற்றியுள்ளார். கரிவலம்வந்த நல்லூரில் உறையும் சிவபெருமான் மீது திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி பாடினார். இது 'குட்டித் திருவாசகம்' என அழைக்கப்படும் சிறப்புடைத்து.

'சிந்தனை உனக்குத் தந்தேன் திருவருள் எனக்குத் தந்தாய்
வந்தனை உனக்குத் தந்தேன் மலரடி எனக்குத் தந்தாய் பைந்துணர் உனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய்

கந்தனைப் பயந்த நாதா, கருவையில் இருக்கும் தேவே!'

என்ற உருக்கமான பாடலை இந் நூலின்கண் காணலாம். இவர் தமையனார் வரதுங்கராம பாண்டியர் ஆவர். இவர் கல்வி மிக்கவர்; வடமொழிக் கொக்கோகத்தைத் தமிழ்ப்படுத்தியவர். 'பிரம்மோத்தர காண்டம்' எனும் நூலையும் செய்துள்ளார். இவர் மனைவியாரும் தமிழ்ப் புலமை சான்றவர் என்பதனை அறிகிறோம். இப் பெண்ணரசியார் நைடதத்தை 'நாய் விரைந்தோடி இளைத்தாற்போன்ற தன்மையுடைத்து' என்று கூறி, அந்நூலின் குற்றத்தினைப் புலப்படுத்தியிருப்பது, அவருடைய நூல் ஆயும் நுண்ணறிவினை நுவலும்.

கச்சியப்ப முனிவர்

கவிராட்சதர் எனப் புகழப்படும் கச்சியப்ப முனிவர், இக்காலத்தில் வாழ்ந்தவரே. இவருடைய புராணக் காதலில் முகிழ்வித்தவையே விநாயக புராணமும், தணிகைப் புராணமும். தணிகைப் புராணத்தின் நடை சிறிது கடினமாயிருந்தாலும், இன்று சைவர்களால் நன்கு போற்றப்படுகிறது.