பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தமிழ் இலக்கிய வரலாறு


அச் சத்திரத்தில் கதிரவன் மேலைத் திசையில் மறையும் நேரத்தில் அரிசி வருகிறதாம். அவ் வரிசியினைக் குற்றி நொய்யும் நொறுங்கும் களைந்து உலையிலிட ஊரடங்கும் நேரம் ஆகிவிடுகின்றதாம். உண்போர் இலையில் அகப்பைச்சோறு விழும் நேரத்தில் கீழ்வானத்தில் வெள்ளி எழுந்து விடுகிறதாம் நகைச்சுவை கொப்புளித்தோடும் அந் நலமிக்க பாடலைக் காண்போம்:

'கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குற்றி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்.'

'திருவானைக்கா வுலா' என்று இவர் இயற்றிய நூல், திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் மீது பாடப்பட்டதாகும். இவருடைய தனிப்பாடல்களைத் தமிழ் நாவலர் சரிதை, தனிச்செய்யுள் சிந்தாமணி, தனிப்பாடற்றிரட்டு, பெருந்தொகை முதலிய நூல்களில் படித்து மகிழலாம்.

'இத்திரன் கலையா யென்மருங் கிருந்தான்' என்ற இவர்தம் பாடல் தொடரால், இவர்கால மன்னன் கல்பாணிச் சாளுவ திருமலைராயன் என்று கொண்டு, இவருடைய காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்கிறோம்.

அதிமதுர கவி

இவர் காளமேகப்புலவர் காலத்தவர். இருவருக்கிடையிலும் பகைமையிருந்தது என அறிகிறோம். இவர் நாகூரை அடுத்த திருமலைராயன் பட்டினத்தில் இருந்த அரசவைப்புலவர். இவர் கொண்ட செருக்கு, காளமேகப் புலவரால் அடக்கப்பட்டது.