பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமையும் சிறப்பும்

19

‘ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!’

என்றார்.

தமிழ் நாடு

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் ஹரப்பா, மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகத்திற்கு இணையான திராவிட நாகரிகத்தை - தமிழ் நாகரிகத்தைக் கொண்டிலங்கியது என்று அறிஞர் துணிகின்றனர். மேலும், குமரிக்கண்டம் என்று தமிழ் இலக்கியங்களிலிருந்து அறியலாகும் தமிழ் நாட்டின் தென் பகுதியே, மனிதத் தோற்றத்தின் முதலிடமாய் இருக்க வேண்டும் என்பர்.[1] இப்பகுதியை ‘லெமூரியா’ என்று வழங்குவர். அறிஞர் ஸ்காட்டு எலியட்டு ‘இழந்த லெமூரியா’ என்னும் தம் நூலிலே, லெமூரியாக் கண்டமே ‘மனித நாகரிகத்தின் தொட்டில்’ (Cradle of human race) என்று கூறியுள்ளார். அந் நிலப்பகுதியே தென்னமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர் என ஒரு பக்கமும், மலேசியா ஆஸ்திரேலியா என மற்றொரு பக்கமும் பெரிய நிலப்பகுதியாய் விரிந்திருந்தது. பஃறுளியாறு பாய்ந்து வளப்படுத்திய-பல மலைகள் பீடுற நிமிர்ந்து நின்று அப்பகுதியே பிற்காலத்தில் கடல் கோளால் அழிந்தது என்று சிலப்பதிகாரம்,[2] புறநானூறு[3], ‘இறையனார் களவியலுரை’[4] என்னும் நூல்கள் அறிவிக்கின்றன. அதனால், அப்பகுதியில் வாழ்ந்த அறிவும் ஆற்றலும் சான்ற மக்கள் உலகின் பல்வேறு இடங்


  1. V. R. R. Dikshitar, Pre-historic India, p. 70.
  2. பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    :குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
    - சிலப்பதிகாரம்- காடுகாண் காதை, 18-20
  3. முந்நீர் விழிவி னெடியோன்
    :நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’
    -புறம் 9; 10.11
  4. இறையனார் களவில் உரை. ப, 6.