பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

209


திருவாவடுதுறை மடம்

கி. பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய இம் மடத்தைச் சார்ந்த, பாடல் பெற்ற சைவத்தலமும் ஒன்றுண்டு. இதுபோது இவ்வாதீனத்தின் தலைவராய் இருப்பவர்கள் 21ஆம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள். இவர்கள் கல்வி, சமயம் மருத்துவம், விவசாயம் முதலிய துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும்பொருள் செலவிட்டு வருகின்றார்கள். பலவிடங்களில் தேவாரப் பாடசாலைகள் நிறுவியுள்ளார்கள். ஆங்காங்குத் தக்க அறிஞர்களைக்கொண்டு சமயச் சொற்பொழிவு நடத்துவிக்கின்றார்கள். முன்னர் அருளாட்சி நடத்திய மகா சந்நிதானங்களின் நினைவு நாள்களில் ஒவ்வோர் உயரிய நூலினை வெளியிடுகின்றார்கள். இம் மடத்தின் மேற்பார்வையில் ஓர் உயர்நிலைப் பள்ளியும் நடத்தப்படுகின்றது. டாக்டர் உ. வே. சா. அவர்களின் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இம்மடத்தின் அவர் காலத் தலைவராய் வீற்றிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் என்பது, ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இம் மடத்திலே புலவராய் விளங்கிய நமச்சிவாய தேசிகர் அருள்நந்தி சிவாசாரியாரின் இருபா இருபஃதுக்கும், உமாபதி சிவாசாரியாரின் வினா வெண்பாவுக்கும் உரை எழுதிச் சைவ சித்தாந்தக் கருத்தினை மக்களிடையே பரப்பினார். இவருடைய மாணவர் தட்சணாமூர்த்தி என்பவர் தசகாரியம், உபதேசப் பஃறொடை வெண்பா என்னும் நூல்களை அருளினார். அம்பலவாண தேசிகர் தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாக்கிரகத் தெளிவு. சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாய நிட்டை வெண்பா, உபதேச வெண்பா, நிட்டை விளக்கம், அதிசய மாலை, நமச்சிவாய மாலை என்னும் பத்து நூல்களின் ஆசிரியராய் விளங்குகிறார். சூத்திரங்களில்

த.-14