பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தமிழ் இலக்கிய வரலாறு


வேற்றுமை, வினை, ஒழிபு என்னும் மூன்று பகுதிகள் கொண்டு 'இலக்கணக் கொத்து' என்னும் நூலைச் செய்தவர் ஈசான தேசிகர். தமிழ் நாட்டின் பலனை எல்லாம் நுகர்ந்த இவர், 'ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே' என்று தமிழ் மொழியினை இகழ்ந்து பேசியிருப்பது வருந்துதற்குரியது. இவர் தசகாரியமும் திருச்செந்திற் கலம்பகமும் செய்ததாகவும் கூறுவர். இரு வேலப்ப தேசிகர்கள், மடத்தில் வாழ்ந்தார்கள். முன் வேலப்ப தேசிகர் பெரியலூர்ப் புராணமும், பின் வேலப்ப தேசிகர் பஞ்சாக்கரப் பஃறொடையும் இயற்றினர்.

மடங்களில் வாழ்ந்த புலவர்கள் இலக்கண நூல்களும், சித்தாந்த சாத்திரங்களும், அவற்றிற்கு உரைகளும் எழுதியதோடு அமையாது. இலக்கண நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்கள். இம் முறையில் சங்கர நமச்சிவாயப் புலவர் பவணந்தி முனிவரின் நன்னூலுக்கு எல்லோருக்கும் விளங்கும் எளிய முறையிலேயே ஓர் உரை கண்டார். வடமொழிப் புலமையும், தென்மொழிப் புலமையும் ஒருங்கமைந்த சிவஞான முனிவர், பாண்டிநாட்டு விக்கிரமசிங்க புரத்திலே ஆனந்தக் கூத்தர்க்கும் மயிலம்மைக்கும் மகவாய்த் தோன்றி, எண்ணற்ற நூல்களை எழுதினார். யமகம், திரிபு என்னும் (சொல் அணிகளை விளக்கும் முல்லைவாயிலந்தாதி, திருக்குறட் செய்யுள்களுக்கு உதாரணச் செய்திகளைக் கூறும் சோமேசர் முதுமொழி வெண்பா, கற்பனை வளம் மிகுந்த அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், உருக்கமான பாடல்களைக் கொண்ட கலைசையந்தாதி, காஞ்சிப் புராணம் முதலியன இவர் இயற்றிய நூல்களாகும். இவர் நன்னூலுக்கும் உரை கண்டுள்ளார். இவரது 'தொல்காப்பியச் சூத்திர விருத்தி' சிறந்த ஆய்வு நூலாகும். 'திராவிட மாபாடியம்' என்னும், சிவஞான போதத்திற்கு இவர் எழுதிய உரை, இவருடைய பெயரை என்றும் இவ்வுலகில் வாழவைப்பதாகும்.