பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தமிழ் இலக்கிய வரலாறு


கலம்பகம், மற்றும் நூற்றுக்கு மேலான சைவச்சார்பு நூல் கள் சிறப்புடையன.

தருமையாதீனம், தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் திகழும் இருபத்தேழு திருக்கோயில்களைச் சிறப்பாகப் பரிபாலித்து வருகிறது. இத் திருக்கோயில்களை ஒட்டிப் பல அரிய தலபுராணங்களும் சிற்றிலக்கியங்களும் எழுந்தன. காலத்தின் தேவை கருதி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், பல அரிய நூல்களை இவ்வாதீனம் சிறந்த முறையில் அச்சிட்டு, இலவசமாகவும் அடக்க விலையிலும் வழங்கிவருகிறது. இதுவரை 800 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருக்குறள் உரை வளம், திருமுறை உரைப்பதிப்புகள், சைவசித்தாந்த உரை நூல்கள் போல்வன குறிக்கத்தக்கன. நாற்பத்திரண்டு ஆண்டுகளாக, 'ஞான சம்பந்தம்' என்ற அரிய திங்கள் இதழ் ஆதீனச் சார்பில் வெளிவருகிறது. பார்வை நூலாகப் போற்றத்தக்க இவ் வெளியீடு வாயிலாகப் பல்வேறு புதிய நூல்களும், உரைகளும், ஆய்வுகளும் தமிழுலகிற்குக் கிடைத்து வருகின்றன.

தமிழ்க் கல்வி வளர்ச்சி நோக்கில் ஆதீனச் சார்பில் 1946 முதல் தமிழ்க் கல்லூரி ஒன்றும் நடைபெற்று வருகிறது. சிறந்த தமிழறிஞர்கள் பலரும் இங்கே பணியாற்றியுள்ளனர். ஆதீனம் 18 மொழிகளில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றைப் பராமரித்து வருகிறது. தமிழகத்து நல்லறிஞர்கள் பலருக்கும் ஆதீனம் பட்டங்கள் வழங்கி அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டி வருகிறது. பலர் ஆதீனப் புலவர்களாக விளங்கித் தமிழ் வளர்த்து வருகின்றனர். தேவாரம் பயிற்றுவிக்க ஒரு பாடசாலையும் இங்கே நடைபெற்று வருகிறது. தமிழ்த் திருமுறை வாணர்களுக்கு ஆண்டுதோறும் சீகாழி மற்றும் திருவாமூரில் பட்டமளித்துப் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.