பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழ் இலக்கிய வரலாறு


தாள் காசிமடம்' என்னும் பெயர் ஏற்பட்டது. குமரகுருபரரை அவர் காலத்து ஆதரித்தவர், அப்போதைய தருமபுர மடத்தின் தலைவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர். எனவே இதனைத் 'தருமபுரத்தின் சிஷ்ய மடம்' என்றும் வழங்குவர். இன்னும் தருமையாதீன கர்த்தரே இம் மடத்திற்குத் தலைவரை நியமித்துவருகிறார்.

இப்போது இம் மடத்தினைத் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்திவரும் சைவப் பெரியார், ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் என்பவர். இவர்கள் சைவமும் தமிழும் 'தழைத்தினிதோங்க அளப்பரிய தொண்டு செய்துள்ளார்கள். திருப்பனந்தாளில் தமிழ்ப் புலவர் கல்லூரி ஒன்றினையும், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கலைக்கல்லூரியினையும், ஓர் உயர் பள்ளியினையும் நிறுவியுள்ளனர்; தேவாரப் பாடசாலைகளும், மருத்துவமனைகளும் ஏற்படுத்தியுள்ளனர். திருக்கோயில்களில் தேவாரத் திருப்பதிகப் பாடல்களைச் சலவைக் கற்களில் பொறித்துவைத்துள்ளனர். 'சிவசிவ' என்ற மின் விளக்குகளையும் சிற் சில கோயில்களில் பொறித்துள்ளனர். இம் மடத்தின் தலைவராய் முன்னர் இருந்து மறைந்த ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் சென்னைப் பல்கலைக்கழகத்து வித்துவான் தேர்வில் முதன்மை பெறுபவர் ஆயிரம் ரூபாய் பரிசு பெறும்வண்ணம் நிலையான ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். மேலும் குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, ஸ்ரீ கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் முதலியன டாக்டர் உ. வே. சா. அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் இவர் ஆதரவில் வெளிவந்தன. சிவபோகசார நூலினைக் கல்லூரி மாணவர் பயிலும்வண்ணம் ஒரு பரிசுத் திட்டத்தினையும், உயர்பள்ளி மாணவர்கள் தமிழில் அக்கறை கொள்ள ஒரு பரிசினையும் இம் மடத்தினர் நிறுவியுள்ளமை பெரிதும் பாராட்டத்தக்க தாகும்.

'குமரகுருபரன்' என்னும் திங்கள் இதழ், இம்மடத்தின் வழி வெளிவருகிறது. தேவாரம், திருவாசகம், பெரிய