பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயக்கர் காலம்

215


புராணம், திருக்குறள் உரைக்கொத்து முதலிய சிறந்த எண்ணற்ற நூல்களை அடக்க விலைப்பதிப்பாக இவர்கள் வெளியிட்டுள்ளமை ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கத்தக்கது. அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வழி திரு. க. வெள்ளைவாரணனார் அவர்கள் எழுதி வெளிவந்த 'பன்னிரு திருமுறை வரலாறு', திரு. நீ. கந்தசாமிப்பிள்ளை அவர்கள் எழுதி வெளிவந்த 'திருவாசகம்' என்னும் இரு அரிய நூல்களும், இக் காசி மடத்தின் பொருளாதரவினால் வெளிவந்தவையே என்பது சிறப்புடன் பாராட்டற்குரிய செய்தியாகும்.

மதுரை மடம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அண்மையில் இருக்கும் இம் மடத்தினை, ஞானசம்பந்தர் வந்து தங்கிய மடம் என்பர். இதுவே இன்றுள்ள சைவ மடங்களில் மிக மிகப் பழையது. இப்போதுள்ள ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் 295ஆம் குருக்கா சந்நிதானம் ஆவர். இம் மடம் 'திருஞான சம்பந்தர் திருமடம்' என்று கூறப்படும். பிற சமயத்திற் சார்ந்துவிட்டவர்களை மீட்டும் சிவதீட்சை தந்து சைவ சமயத்திற் சேர்த்துக் கொள்ளும் பணியினை இம் மடம் செய்துவருகின்றது. சுவாமிகளே நூல் இயற்ற வல்லவர்கள். சிவலிங்கத் தத்துவம், இறந்தவர்களுடன் பேசுதல் முதலிய நூல்களை எழுதியுள்ளார்கள். ஆங்காங்கு அருள்நெறிக் கழகத்தினை நிறுவிச் சைவம் வளரத் தமிழ் தழைக்கப் பாடுபட்டு வருகிறார்கள்.

வீரசைவ மடங்கள்

வீரசைவரான துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் நிறுவப்பட்ட இம்மடங்கள், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. மைசூர் மாநிலத்திலும் வீரசைவர் நிரம்பியுள்ளனர். இவர்கள் மார்பில் சிங்கம் கட்டிக்கொள்வார்