பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தமிழ் இலக்கிய வரலாறு


கள் வீரசைவ மடங்களுள் ஸ்ரீமயிலம் மடம், கோவையை அடுத்த பேரூர் சாந்தலிங்க சுவாமி' மடம், ஸ்ரீஞானியார் மடம், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் மடம் என்பன இன்றளவும் சிறப்புற்று விளங்குகின்றன. மயிலம் மடம் தமிழ் வித்துவான் கல்லூரியினை 'ஸ்ரீசிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி' என்னும் பெயரில் நடத்திவருகிறது. சைவத்திற்கும் தமிழ் மொழிக்கும் அருந்தொண்டாற்றும் இம்மடம், சிவப்பிரகாச சுவாமிகள் நூல்களையும், பிரபுலிங்க லீலை உரையினையும் வெளியிட்டுள்ளது. பேரூரில் தமிழ்ப் புலவர் கல்லூரி உளது. திருப்போரூர் மடத்தைத் தோற்றுவித்தவர் ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சுவாமிகள். இம்மடம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரையினைப் பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களைக் கொண்டு எழுது வித்து வெளியிட்டுள்ளது. திருப்பாதிரிப்புலியூர் மறைத்திரு ஞானியார் சுவாமிகள் வடமொழி, தென்மொழி, இலக்கிய இலக் கணத்தத்துவ சாத்திரம் முதலிய துறைகளில் பேரறிஞராகத் துலங்கியவர்கள். சைவசமயச் சொற்பொழிவாற்றுவதில் இவர்கள் இந் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈடும் இணையுமற்றவர்களாக விளங்கினார்கள். இவர்களுடைய கந்தசஷ்டி சொற்பொழிவுகள் சிறப்புடையன. சில சொற் பொழிவுகள் 'ஞானியார் நினைவு மலர்" என்னும் பெயரில் சைவசிந்தாந்த சமாஜத்தாரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. திருவண்ணாமலை மடம் வீரசைவ மடமாய் விளங்கிய இம் மடம், சித்தாந்த சாத்திரங்களைப் பரப்புவதில் முன்னின்றது. திருவண்ணாமலையில் ஒரு குகையில் துறவுபூண்டு யோகியாய் வாழ்ந்தவர் குகை நமச்சிவாயர். அக மனத்தை ஆராய்கின்ற போக்கில் நூறு வெண்பாக்கள் கொண்ட அருணகிரி அந்தாதியை இவர் இயற்றியுள்ளார். இவருடைய மாணவராகிய ஆறுமுக சுவாமிகள் 'நிட்டானுபூதி' என்ற நூலை வடநூலினின்றும் மொழி பெயர்த்தார். முத்துக் கிருட்டிணப் பிரம்மம்