பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தமிழ் இலக்கிய வரலாறு


இமயம் வரை பரப்பிய குமரகுருபரர்: மற்றொருவர், 'கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் சிவப்பிரகாசர்.

குமரகுருபரர்

சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மைக்கும், திருநெல்வேலிச் சீமையிலே ஸ்ரீ வைகுண்டத்திலே சைவ வேளாளர் மரபிலே ஊமையாய்ப் பிறந்து, ஐந்தாண்டுகள் வரை பேசாமல் இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார் என இவர் வரலாறு கூறுகின்றது. "இவர் பழுத்த தமிழ்ப்புலமை வாய்ந்தவர்; சிறந்த சிவநேசச் செல்வர்; உயர் குணம் ஒருங்கமைந்த பெருந்தகை. உலகியல் அறிந்த பேரறிஞர். தமிழ்மொழியின்பால் இவருக்கிருந்த பக்தி அளவிடற்கரியது. அதனைத் தீந்தமிழ், தெய்வத்தமிழ் என்பர். பாவும் பாவினமும் ஆகிய செய்யுள்களைப் பாடுவதில் இவருக்கு மிகுந்த வல்லமையிருந்தது. இல்பொருள் உவமை, உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம் முதலிய அணிகளை ஆடம்பரமாக இவர் கையாளுவார். இவரது கற்பனையிலே உண்மை நிலைகளைக் காணல் அரிது. இவருடைய செய்யுள்களின் தனிச்சிறப்பு, பெருமித நடையும் ஓசை வளமுமே. சொற்களும் சொற்றொடர்களும் "பெருநை நதியின் வெள்ளப்பெருக்குப் போல் இவர் வாக்கிலே பிரவகிக்கும். இவர் வடநாட்டிலே சைவ சமயத்தைப் பரப்பினார்; அங்கு இந்தி கற்றுச் சொற்பொழிவாற்றினார்: காசியில் ஒரு மடாலயம் நிறுவினார்; திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரால் இவர் ஏற்படுத்திய மடம், இன்றும் தமிழ்த்தொண்டாற்றி வருகிறது. இவர் சில இந்துஸ்தானிச் சொற்களைத் தம் பாடலில் ஆண்டுள்ளார்.

இயற்றிய நூல்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் கயிலாயநாதர்மீது கயிலைக்கலம்பகம் பாடினார். மதுரை அங்கயற்