பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

219


கண்ணியாம் மீனாட்சியம்மையை நோக்கிப் பாடியது 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' இதில் உள்ள “தொடுக்குங் கடவுள்' என்னும் பாடல், தெய்வீகப் பாடலாகும். திருவாலவாயில் உறையும் சோமசுந்தரப் பெருமான்மீது 'மதுரைக் கலம்பகம்' பாடினார், மதுரைத் திருமலை நாயக்க மன்னரின் வேண்டுகோட்படி, 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலினை இயற்றினார். இந்நூலில் பழந்தமிழ் நூல்களின் தொடர்களைக் காணலாம். திருவாரூரில் 'திருவாரூர் நான்மணி மாலை' பாடினார். புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முத்துகுமார சுவாமி கடவுளின்மீது 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்' பாடினார். சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரத்தில் பாடப் பெற்றது. இவர் இயற்றிய பண்டார மும்மணிக் கோவை சைவ சித்தாந்தச் சிறுகாப்பியமாய் விளங்குகிறது. காசியிலே 'காசிக் கலம்பகம்' இயற்றினார். முகம்மதிய பாதுஷாவின் ஆதரவு தேடச் சென்றபோது பாடிய நூல், சகலகலாவல்லி மாலை இவர் இரட்டை மணிமாலை, செய்யுட்கோவை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

பிள்ளைத்தமிழ்

நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்த வகைகள் தோன்றின. 'பந்தம்' என்னும் சொல்லிற்குக் 'கட்டுதல்' என்பது பொருள் தமிழில் வழங்கும் பிரபந்தங்களை இலக்கண நூலார் தொண்ணூற்றாறு வகைப்படுத்துவர். பிள்ளைத்தமிழைப் 'பிள்ளைக்கவி' என வெண்பாப் பாட்டியலும், பிள்ளைப் பாட்டெனப் பன்னிரு பாட்டியலும் கூறுகின்றன.

'குழவி மருங்கினும் கிழவ தாகும்'

என்னும் தொல்காப்பிய நூற்பா, பிள்ளைத் தமிழ் இலக்கியத் தோற்றத்துக்குச் சான்றாய் விளங்குகின்றது.