பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

தமிழ் இலக்கிய வரலாறு


'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப்'

என்னும் தொல்காப்பிய நூற்பா, தொல்காப்பியனார் காலத்திலேயே பிள்ளைத் தமிழ் நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதனை உணர்த்தும்.

இலக்கணம்

புலவர் தாம் விரும்பும் அரசனையோ அல்லது பெரியாரையோ அல்லது தெய்வத்தையோ குழந்தையாக எண்ணி, அக்குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் இருபத்தோராம் மாதம் வரையில் உள்ள பருவங்களைப் பத்துப் பருவங்களாக வகுத்துக்கொண்டு, ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்பத்து விருத்தப் பாடல்களை அமைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் எனப்படும்.

'பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்
மூன்று முதலா மூவேழ அளவும்

ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.'

- பன்னிரு பாட்டியல், 101

'சாற்றரிய காப்புத்தாள் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை- போற்றரிய
அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே

பம்புசிறு தேரொடும் பத்து'

- வெண்பாப் பாட்டியல், செய்யுளியல், 7

அவற்றுள்,

'பின்னைய மூன்றும் பேதையர்க் காகா:
ஆடுங் கழங்கம் மானை ஊசல்
பாடுங் கவியால் வகுத்து வகுப்புடன்

அகவல் விருத்தத் தாற்கினை யனவாம்'

- இலக்கண விளக்கப் பாட்டியல், 47