பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயக்கர் காலம்

221


இங்குக் கூறப்பட்ட நூற்பாக்கள், 'ஆண்பாற் பிள்ளைத் தமிழ்' என்றும், 'பெண்பாற் பிள்ளைத் தமிழ்' என்றும் இரு பகுப்பு பிள்ளைத்தமிழில் உண்டென்பதனை உணர்த்தும். ஆண்பாற் பிள்ளைத்தமிழெனப்படுவது, காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை. சிற்றில், சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களைக் கொண்டதாகும். பெண்பாற் பிள்ளைத்தமிழெனப்படுவது. இவற்றில் முதல் ஏழு பருவங்களையும் பொதுவாகக் கொண்டு, இறுதியில் அமைந்துள்ள மூன்று பருவங்களுக்குப் பதிலாகக் 'கழங்கு, அம்மானை, ஊசல்' என்னும் மூன்று பருவங்களைக் கொண்டதாகும். சிற்றில் இழைத்தல், சிறுசோறு ஆக்கல், ஊசல் என்னும் பருவங்களும் - பருவவிளையாட்டுகளும் பெண்பாற் பிள்ளைத்தமிழில் கூறப்படுவதுமுண்டு.

அமைப்பு

முதலாவது பருவம் காப்புப் பருவம். இது பாட்டுடைத் தலைவனைக் காத்தருளுமாறு தெய்வத்தை வேண்டுவதாகும். பெரும்பாலும் திருமாலைக் காப்புப் பருவத்து முதற்கடவுளாகக் கொள்ளல் வேண்டும் என்ற வரையறை உண்டு. இக்காப்புப் பருவம் குழந்தையின் மூன்றாம் திங்களுக்கு உரிய பருவம். இரண்டாவது பருவமான செங்கீரைப் பருவம் ஐந்தாம் திங்களுக்குரியதாகும். இது செம்மையான மொழியைப் பேசுமாறு குழந்தையை வேண்டுவதாகும். (கீர்- சொல்). மூன்றாவது பருவம் தாலப் பருவம். இது தாலாட்டுப் பருவமாகும். இது குழந்தையை இருகைகளையும் சேர்த்து ஓசையெழக் கொட்டும்படி கேட்கும் பருவமாகும். பதினோராம் மாதத்தின் நிகழ்ச்சியினைக் கூறும் ஐந்தாவது பருவமான முத்தப்பருவம் குழந்தையினை முத்தம் தருகவெனத் தாயரும் பிறரும் வேண்டுவதாகும். ஆறாவது பருவமான வருகைப்பருவம் வாரானைப்பருவம் என்றும் வழங்கப்படும். இது, தளர் நடையிட்டு வரும் குழந்தையை வாவென்று அழைப்பது. இது பதின்மூன்றாம் மாதத்து நிகழ்ச்சி கூறுவதாகும்.