பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமையும் சிறப்பும்

21

“தமிழில் அரிசி என்பது கிரேக்கத்தில் ‘ஒரிசி’ எனவும், கறுவாய் என்பது ‘கற்பியன்’ எனவும், இஞ்சிவேர் என்பது ‘சிக்கி பெரோசு’ எனவும் ‘பப்பியிலிருந்து’ ‘பெப்பரி’ எனவும் பெயர்ந்து சென்ற மொழிகளாகும். கிறிஸ்து அப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் ஐரோப்பாவுடன் நடைபெற்ற தென்னிந்திய வாணிகத்தைப் பற்றிய விவரங்கள் பல கிட்டியுள்ளன. அவற்றுள் மிகச் சிறந்தவை உரோமை வல்லரசர் அகஸ்ற்றசின் காலத்தைச் சார்ந்த ஸ்டிராபோவின் விவரணம், சுமார் கி.பி. 60 இல் தோன்றியுள்ள ‘பெரிபுளுஸ்’ என்னும் நூல், பிளினியின் ‘இயற்கை வரலாறு[1], (சுமார். கி.பி. 77), தாலமியின் ‘பூகோள விவரணம்’ (சுமார் கி. பி. 170) என்னும் நூல்களாகும். இவ் வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் நுண்ணிய விவரங்கள் சங்க நூல்கள் பலவற்றில் காணப்படும் கருத்துகளுக்கு மிகப் பொருத்தமாயிருக்கின்றன.”

வேதங்களில் குறிப்பிடப்படாத யானை, கி. மு. ஏழாம் நூற்றாண்டில் அசிரிய நாட்டு மன்னனுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. நீலிச்சாயம் தோய்க்கப்பட்ட துணிகள் எகிப்துக்கும் பாரசீகத்திற்கும் அனுப்பப்பட்டன. சேர நாட்டின் தேக்கு மரம் பிற நாட்டில் கட்டடங்கள் கட்டவும், கப்பல்கள் கட்டவும் உதவியது. யவனர் மிளகு கொண்டு சென்றனர்; பொன்னும் மதுவும் கொண்டு வந்தனர். அவர்கள் வாழ்ந்த குடியிருப்புகளும் தமிழ் நாட்டில் இருந்தன. புதுச்சேரியின் அருகே ‘அரிகாமேடு’ என்ற இடத்தைத் தோண்டிப் பார்த்ததில், அவ்விடத்தே அத்தகையதோர் யவனக் குடியிருப்பு இருந்தது என்பது தெரிந்தது. யவனரின் அழகிய புலிச்சங்கிலிகளும், பாவை விளக்குகளும் தமிழ் நாட்டிற்கு வந்தன. ஆர்க்கிமிடீஸ் என்பவர் சைரக்யூசில் உரோமரது முற்றுகையை எதிர்க்கப் பலவகை எந்திரங்களைக் கண்டுபிடித்தார். அவையெல்லாம் “யவனப் பொறி


  1. டாக்டர் கே.கே. பிள்ளை , தென்னிந்திய வரலாறு ப. 32-33