பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயக்கர் காலம்

231


புலமைக்குச் சான்று பகர்வது போல இவரியற்றிய 'சீறாப்புராணம்' சிறப்புற்றுத் திகழ்கிறது. சீறாப்புராணம் நபி நாயகத்தின் வரலாற்றினையும், தொண்டினையும், அறிவுரையினையும் விளக்கிக் கூறுகிறது. இராமநாதபுர மன்னர் இரகுநாத சேதுபதியிடம் அமைச்சராய் விளங்கிய வள்ளல் 'செய்து காதர் மரைக்காயர்' என்பவர். இவரே சீதக்காதி என வழங்கப்படுபவர். 'செத்துங் கொடுத்தான் சீதக்காதி' என்ற உரை, இவர் வள்ளன்மையைத் தெரிவிப்பதாய் நிலவுகிறது. இவரே உமறுப் புலவரை ஆதரித்து. முகம்மது நபியின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு இவற்றினை ஒரு நூலாக எழுதத் தூண்டினார். சீதக்காதி, காயல்பட்டினத்தில் வாழ்ந்த வள்ளல் என்பதைப் படிக்காசுப் புலவர் பாடல் கொண்டு தெளியலாம். சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நபுவத்துக் காண்டம், இஜித்துக் காண்டம் என மூன்று காண்டங்களும், தொண்ணூற்றிரண்டு படலங்களும், ஐயாயிரத்து இருபத்தேழு செய்யுள்களும் கொண்டது. நாட்டுப் படலமும் நகரப் படலமும் இந்நூலில் அழகான முறையில் அமைந்துள்ளன.

குணங்குடி மஸ்தான் சாகிபு

நாற்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த இவர் பிறப்பிடம், காயல் பட்டினமாகும். இளமையில் இவர் அத்தர் வியாபாரியாய் விளங்கினார். பின்னர்த் துறவியாகச் சென்னை இராயபுரத்தில் வாழ்ந்தார் என்பர். இவர் முகம்மதிய மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ளம் கொண்டவர். தாயுமான அடிகளின் பாடல் போன்று இவருடைய பாடல்களும் சமயத் தெளிவினையும் உண்மையினையும் வற்புறுத்தி நிற்கின்றன. இவர் அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், நிராமயக்கண்ணி ஆனந்தக்களிப்பு என்பவற்றினை இயற்றியுள்ளார். அகத்தீசர் சதகம், குரு வணக்கம், காட்சிநிலை, துறவுநிலை, உள்நிலை, தொகைநிலை, பொறைநிலை, தியானநிலை, சமாதி நிலை என்னும் பிரிவுகளோடு, ஆயிரத்து எழுநூற்று