பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

237


மனத்தில் கொள்வதற்கும் மனப்பாடம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. செய்யுளை மனப்பாடம் செய்வதே எளிய விரைந்த செயல். இவ்வாறான காரணங்களால் செய்யுள் வழக்கே ஐரோப்பியர் வருகைக்குமுன் பெருவழக்காயிருந்தது. இதே நிலைமையினை ஐரோப்பியர் நன்கு குறிப்பிட்டுள்ளனர். 'தமிழர் உரை எழுதும் பழக்கம் இன்னும் தொடக்க நிலையில் இருக்கிறது. விரைவாகவும் சரமாரியாகவும் கவிபாடக்கூடிய புலவர் உரைநடையிற் சில சொற்றொடர்கள் எழுதத் தெரியாமலிருக்கின்றனர்' என்னும் கருத்துப்பட வின் ஸ்லோவின் தமிழ் - ஆங்கில அகராதியின் முகவுரையில் எழுதப்பட்டிருக்கிறது. 'மருத்துவம், கணிதம், இலக்கணம், நிகண்டு முதலிய எல்லா நூல்களும் (அவற்றின் உரைகளைத் தவிர) செய்யுளிலே இயற்றப்பட்டிருக்கின்றன. 'உரைநடையில் நூல் இயற்றும் வழக்கம், ஐரோப்பியரின் தொடர்பால் ஏற்பட்டதாகும்' என்று தமிழைப் பற்றி மர்டாக் துரை எழுதியிருக்கிறார்.[1]

மேலே கூறப்பட்டு வந்த கருத்துகள் பொருந்து மாற்றினைப் பின்னர்க் காண்போம். உரைநடை நூல்கள் மட்டுமன்றி, வேறு பல மாற்றங்களும் ஐரோப்பியர் வருகையால் விளைந்தன. 'தமிழ் எழுத்துகளை எளிமையாக்கினர். பல சொற்கள் அமைந்த தொடரினை (வாக்கியத்தை) ஒரே நீண்ட சொல்லால் ஆன தொடர் போல எழுதிவந்த பழக்கத்தினை மாற்றிச் சிறிய வாக்கியமாயிருப்பினும் பெரிய தொடராயிருப்பினும் சொற்களின் இடையிடையே இடம் விட்டு எழுதுகின்ற முறையினை அவர்கள் புகுத்தினர். துண்டுத்தாள்களையும், புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் அச்சியற்றிய முதல்வர் அவர்களே, பண்பாட்டில் உயர்ந்த உலகின் பிற பகுதிகளில் தமிழ் மொழி படிக்கப் பெறும் ஆர்வத்தினை அவர்களே ஊட்டினர். ஐரோப்பிய மொழிகளிலிருந்து சில நூல்களை முதன்முதல் தமிழில்


  1. திரு. மயிலை சீனி. வேங்கடசாமி, கிறித்தவமும் தமிழும் ப. 23.