பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தமிழ் இலக்கிய வரலாறு

வீரமா முனிவர்

கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி (Constantine joseph Beschi) என்ற இயற்பெயர் கொண்ட இவர்) கி.பி. 1700இல் தமிழ்நாட்டுக்கு வந்து மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றுத் தேறினார். இவர் தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தார். முற்காலத்தில் எகர ஒகரக் குற்றெழுத்துகளும் நெட்டெழுத்துகளும் வேறுபாடின்றி ஒரே மாதிரி எழுதப்பட்டன. இதனை மாற்றி, குற்றெழுத்தின்மேல் புள்ளியிட்டும், நெட்டெழுத்தின் மேல் புள்ளியிடாமலும் எழுதும் சீர்திருத்தத்தினைக் கொணர்ந் தார். மேலும் உயிர்மெய் எகர ஒகரங்களில் மற்றொரு சீர்த்திருத்தினையும் புகுத்தினார். யகர உகர உயிர்மெய்க் குற்றெழுத்துகளை அக்காலத்தில் மேலே புள்ளியிட்டு எழுதினார்கள். “உதாரணம் கெ் பெ் செ் (இவை குற்றெழுத்து) கெ பெ செ (புள்ளி பெறாத இவை நெட்டெழுத்து: கே. பே. சே என்று வாசிக்கப்பட்டன). கொம்பு பெற்று வருகிற இந்த எழுத்துக்கள் குற்றெழுத்துக்கும் நெட்டெழுத்துக்கும் ஒரே மாதிரி எழுதப்பட்டபடியால், அவற்றின் வேறுபாட்டை எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வீரமா முனிவர். நெட்டெழுத்துக்குக் கொம்பை மேலை சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்." அம்முறையே, இப்பொழுதும் வழக்கில் உள்ளது. 'பண்டை நிகண்டுகளில் அமைந்த பதங்களை வரிசைப்படுத்திச் 'சதுர் அகராதி' என்னும் பெயரால் அரியதோர் நூலை அவர் வெளியிட்டார்.[1] அதுவே பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தது. இவர் எழுதிய 'பரமார்த்த குரு கதை' நகைச்சுவை நிரம்பியது; நயம் கெழுமியது. திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானைத்


  1. திரு: மயிலை சீனி வேங்கடசாமி, கிறிஸ்தவமும் தமிழும் ப. 13.92.