பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமையும் சிறப்பும்

23

அனுப்பினான். தமிழ்நாட்டின் பழைய துறைமுகப் பட்டினமாகிய முசிறியில் அகஸ்டஸின் பெயரால் ஒரு கோயில் இருந்தது. ஈராயிரம் உரோமர்கள் அடங்கிய படை ஒன்றும் அங்கு இருந்தது. யவனர் தமிழரசர்களின் வாயில் காப்பாளராயிருந்தனர்[1]. புலித்தொடர் சங்கிலி, பாவை விளக்கு முதலிய பொருள்கள் அவர்களின் கைவண்ணத்தால் அமைக்கப்பட்டன.

அடுத்து, வடநாட்டவரும் தமிழ்நாட்டு வாணிகத்தைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மெளரிய மன்னன் சந்திர குப்தனின் மதிபடைத்த அமைச்சர்- சாணக்கியர் என வழங்கும் கெளடில்யர்- வடநாட்டு வாணகத்தினும் தென்னாட்டு வாணிகமே சிறந்தது என்றும், வடநாடு கம்பள ஆடை, தோல், குதிரை முதலிய எளிய பொருள்களையே வாணிகப் பொருள்களாகக் கொண்டிருக்க, தென்னாடோ விலைமதிப்பு வாய்ந்த பொருள்களாகிய சங்கு, வைரம், மாணிக்கக் கற்கள், முத்து, பொன்னணிகள் முதலியனவற்றைக் கொண்டிருந்தது என்றும் வாயாரப் புகழ்கிறார். இவை எல்லாம் தமிழர் ‘திரைகடலோடியும் திரவியந்தேடி’ அந்நாளிலேயே நாகரிகச் சிறப்புற்றிருந்தனர் என்பதை அறிவிக்கின்றன.

தமிழ்மொழி

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்றும், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்!’ என்றும் பாரதியார் தமிழின் உயர் வினையும் இனிமையினையும் பாராட்டினார். மாக்ஸ்முல்லர் என்னும் மொழி நூலறிஞர், ‘தமிழே மிகவும் பண்பட்ட மொழி’ என்றும், ‘தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி’ என்றும் பாராட்டி


  1. K. A. Nilakanta Sastri, A History of South India, p. 11.