பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

தமிழ் இலக்கிய வரலாறு


பள்ளி, பெருமாளைச் சேவிப்பவள்; இளையவள் மருதூர் பள்ளி, சிவனடியாள். இவ்விருவர்க்கிடையிலும் நிகழும் உரையாடல்கள் நகைச்சுவையும் நயமும் பொருந்தியன. புதிதாகத் தமிழ் படிக்கத் தொடங்கும் சிறுவர்களுக்கு ஆசிரியர் முக்கூடற் பள்ளை ஏட்டில் எழுதிக்கொடுத்துப் படிக்கச் செய்வார்கள். அவ்வாறு எல்லா மக்களாலும் இது விரும்பிப் பயிலப்பட்டு வந்ததோடல்லாமல் விரித்துத் தனி நாடகமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. நாடகமாக அமைத்தவர் 'வேளான் சின்னத் தம்பி' என்ற பெயருடைய என்னயினாப் புலவர். [1]

"எளிய நடையிலமைந்த பாடல்கள் இசையுடன் சேரும்போது, சொற்கள் நெகிழ்ச்சி பெற்று, பழகிய சொற்களாதலினாலே பாடல்களின் நயம் மிகுதியாகிறது. இசை பொருள் உணர்வதிலுள்ள எளிமை என்ற இருவித இயல்புகளாலும் பாமர மக்கள் இப்பாடல்களைச் சுலபத்தில் கேட்டும் உணர்ந்தும் இன்புற முடிகிறது.[2] இம்முறையில் இன்றும் வழங்கும் முக்கூடற்பள்ளுப் பாடலின் அழகைக் காண்போம்.

'ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே- கேணி
நீர்ப்படுசொறித்தவளை கூப்பி டுகுதே!
சேற்றுநண்டு சேற்றைக்குழைந் தேற்றடைக்குதே மழை
தேடியொரு கோடி வானம் பாடி யாடுதே
போற்றுதிரு மாலழகர்க் கேற்ற மாம்பண்ணைச்.- சேரிப்

புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.'

மூத்த பள்ளியின் அழகினை - சாயல், உடை, நடை நளினங்களைப் பள்ளி ஆசிரியர் பின் வருமாறு பாராட்டியுள்ளார் -


  1. திரு. மு. அருணாசலப்பிள்ளை, முக்கூடற்பள்ளு நூல் ஆராய்ச்சி ப. 45.
  2. ஷை ப. 15.