பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

255


நாராயண சாஸ்திரியார், 'வசன நடை கைவந்த வள்ளலார்' எனப் பாராட்டியுள்ளார், 'வைதாலும் வழுவின்றி வைவாரே' என்ற பாராட்டுரையும் இவர் குறித்து எழுந்ததே. ஆங்கில உரைநடைக்கு ஒரு டிரைடன் (Dryden) போலத் தமிழுக்கு ஆறுமுக நாவலர் வாய்த்தார். இவரை,

'நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேற்

சொல்லுதமி ழெங்கே சுருதி எங்கே?'

என்று திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை பாராட்டியுள்ளார்.

சி. வை. தாமோதரம் பிள்ளை

திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை, வைரநாதப்பிள்ளையின் மைந்தராய், யாழ்ப்பாணத்துச் சிறுபிட்டியில் 1832 ஆம் ஆண்டு பிறந்தார். சைவ சமயப்பற்று நிறைந்த இவர், கிறித்தவர்களோடும் நெருங்கிப் பழகினார். 1857ல் நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதல் பி. ஏ. பட்டம் பெற்றார். அரசினர் பதவி வகித்த இவர், அதுநாள் வரை அச்சேறாமல் பனையோலையில் தவம் கிடந்த ஓலைச்சுவடிகளையெல்லாம் சேகரித்துப் பரிசோதித்துப் பதிப்பிக்கத் தொடங்கினார். தொல்காப்பியம் நச்சினார்க்கினியம் சேனா, வரையம்; வீரசோழியம், இறையனார் அகப்பொருளுரை. இலக்கண விளக்கவுரை முதலிய இலக்கண நூல்களையும், கலித்தொகை, தணிகைப்புராணம், சூளாமணி முதலிய இலக்கிய நூல்களையும் பதிப்பித்தார்; தாமாகவே சில நூல்களையும் எழுதியுள்ளார். சிறந்த பதிப்பாசிரியர் என்று நாம் இவரைப் போற்றுகிறோம். இவரைக் குமாரசாமிப் புலவர் என்பார்,

'ஏட்டி லிருந்த அருந்தமிழ் நூல்க னெனைப்பலவுந்
தீட்டி வழுக்களைந்-தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்
நாட்டி லளித்துயர் தாமோத ரேந்திரன் நண்ணுபுகழ்

பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே"

என்று புகழ்ந்து பாடியுள்ளார்.