பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

தமிழ் இலக்கிய வரலாறு


பிற புலவர்கள்

யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்த் தொண்டாற்றியவர்களாகப் பல புலவர்கள் விளங்குகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்து அராலி என்னும் பகுதியில் பிறந்தவர் விசுவநாத சாஸ்திரியார் ஆவர். வண்ணக் குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி இரண்டும் இவர் இயற்றியனவே. சிலேடைக் கருத்துகள் அமைத்துப் பாடுவதில் இவர் வல்லவர். ஆறுமுக நாவலரின் ஆசிரியரான சேனாதிராயர் நல்லைக் குறவஞ்சியும் நல்லை வெண்பாவும் இயற்றினார். இவர் தமிழகராதி ஒன்றையும் தொகுத்தார் என்பர். தாமோதரம் பிள்ளையின் ஆசிரியரான சுன்னாகம் முத்துக்குமார கவிராயர், நடராஜர் பதிகம், ஞானக்கும்மி, ஐயனார் ஊஞ்சல் எனும் நூல்களை அருளினார். மறைசைக் கலம்பகமும், மறைசைத் திருப்புகழும் இயற்றிய பீதாம்பரப் புலவர் சேனாதிராயரின் மாணவர். ஆறுமுக நாவலரின் தந்தையரான கந்தப்பிள்ளை இராம விலாசம், சந்திரகாசம், முதலிய நூல்களை எழுதியுள்ளார்; வடமொழியில் அமைந்துள்ள பகவத்கீதை, சாந்தோக்கிய உபநிடதம், மேகதூதம், கீதோபதேசம் ஆகிய நூல்களைத் தமிழ்ப்படுத்தினார் நாக நாத பண்டிதர். 'சிவ தூடன கண்டனம்', 'கிறிஸ்துவமத கண்டனம்' முதலிய மறுப்பு நூல்களை எழுதிச் சைவ சமயத்தை வளர்த்த சங்கர பண்டிதர், சைவப் பிரகசனம் என்னும் தருக்க நூலினையும் தந்துள்ளார். சிவ சம்புப் புலவர், ஈழ நாட்டுப் புலவர்களுள், பெருந்தொகையான பிரபந்தங்களைப் பாடியவர். இவர் ஏறக்குறைய அறுபது பிரபந்தங்கள்வரை பாடியுள்ளார். இவர் பாடிய தனிச் செய்யுள்களும் பல. இவர் பிரபந்தங்களுட் சிலவே சமயச் சார்புற்றன; ஏனையவை தமிழ்நாட்டிற் பற்பல இடங்களிலுமுள்ள தமிழ்ப் புலவர்கள் மீது பாடப்பட்டவை. சுவைமிக்க இவர் பாடல்கள் படிப்போர்க்குப் பெரிதும் இன்பந்தரவல்லன.[1]


  1. திரு. வி. செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம். ப, 159.