பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

257


கல்லாடச் சாரக் கலித்துறை, செந்தில் யமக அந்தாதி, யாப்பருங்கலக் காரிகை உரை, புலோலி நான்மணிமாலை முதலிய நூல்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளன. சித்திரக் கவிகள் பாடுவதிலும் இலக்கணப் பயிற்சியிலும் வல்லவரான முருகேச பண்டிதர், ஈழத்தில் பிறந்து, தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். மயிலணிச் சிலேடை வெண்பா, சந்திரசேகர விநாயக ஊஞ்சல், நீதி நூறு முதலிய நூல்களை இயற்றியுள்ளார். ‘பில்கணீயம்’ என்ற வடமொழிக் காப்பியத்தைத் தமிழில் தந்தவர் கணபதிப்புலவர் என்பவராவர். வண்ணார் பண்ணையைச் சார்ந்த கணேச பண்டிதர் இளைசைப் புராணம் செய்தார்.

கிறித்தவரும் சமயத் தொண்டினை யாற்றுமுகத்தான் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்; மானிப்பாயில் பிறந்த சதாசிவப்பிள்ளை என்பார் நன்னெறி மாலை, திருச்சதம். பாலவர் சரித்திர தீபகம் முதலிய நூல்களின் ஆசிரியர். கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த கனகசபைப் புலவர் அளவெட்டி என்னும் பகுதியிலே பிறந்து அழகர்சாமி மடல், திருவாக்கு புராணம் ஆகிய நூல்களைச் செய்துள்ளார்.

அதிரூபாவதி நாடகம், அபிமன்னு நாடகம், அலங்கார ரூபாவதி நாடகம், மலையகந்தி நாடகம் முதலிய நாடக நூல்களை இயற்றிய புலவர், கணபதி ஐயர். மயில் வாகனப் புலவர் புலியூர் யமக அந்தாதி என்னும் நூலை இயற்றியதோடு அமையாது. யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தினையும் எழுதியுள்ளார். இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் அமையப்பெற்ற சின்னத்தம்பிப் புலவர் மறைசை அந்தாதி, கருவை வேலன் கோவை, பறாலை விநாயகர் பள்ளு முதலிய பிரபந்தங்களைப் பாடினார். உடுப்பிட்டியிற் பிறந்த கதிரைவேற்பிள்ளை தமிழ்ச்சொல்லகராதி ஒன்றினைத் தொகுத்துள்ளார். சரவணமுத்துப் புலவர் ஆத்மபோத பிரகாசிகை, வேதாந்த சுயம் ஐோதி முதலிய நூல்களின் ஆசிரியராய் விளங்கினார். திராவிடப் பிரகாசிகை என்ற

த.-17