பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

தமிழ் இலக்கிய வரலாறு


அரிய நூலை இயற்றியளித்தவர் வடகோவையிற் பிறந்த சபாபதி நாவலர் ஆவர். தமிழ்நாடு வந்து சிதம்பரத்தில் பலகாலம் வாழ்ந்த இவர், திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் அமர்ந்து, சிதம்பர சபாநாதர் புராணம், பாரத தாற்பரிய சங்கிரகம் முதலிய சமய நூல்களை இயற்றியுள்ளார்.

இவ்வாறு ஈழ நாட்டுத் தமிழர் பலர் புலவர்களாய் விளங்கித் தமிழ்த் தொண்டினையும் சமயத் தொண்டினையும் திறம்பட ஆற்றியுள்ளனர்.

19, 20 ஆம் நூற்றாண்டுத்

தமிழ் அறிஞர்கள்

பூண்டி அரங்கநாத முதலியார், கி. பி. 1844-இல் பிறந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் கணித ஆசிரியராய்ப் பணியாற்றினார். தியாகராச செட்டியாரின் நட்புக் கிடைக்கப்பெற்ற இவர், காஞ்சி ஏகம்பரநாதர்பேரில் கச்சிக் கலம்பகத்தை இயற்றி அழியாப் புகழ் பெற்றார். 1893ஆம் ஆண்டில் மறைந்த இவரை நினைவுபடுத்தும் வண்ணம், மாநிலக்கல்லூரியின் ஒரு பகுதி விளங்குகிறது. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கிய திரு. செல்வக்கேசவராய முதலியார், கம்பர், திருவள்ளுவர் முதலிய புலவர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுதியுள்ளார். சென்னைத் தபால் நிலைய மேற்பார்வையாளராய் இருந்த திரு. கனகசபைப்பிள்ளை தமிழாராய்ச்சியில் திளைத்து, 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' (The Tamils 1800 years ago) என்னும் நூலினைத் தந்துள்ளார். தமிழர்தம் புகழ்மிக்க பழைய வரலாற்றினை இந்நூல் பரக்கப் பேசுகிறது. காவல் துறையில் (Police Department) உயர்ந்த பதவி வகித்த திரு. பவானந்தம்பிள்ளை அவர்கள் 'பவானந்தர் கழகத்தை நிறுவி, பல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழுலகிற்கு அரித்தார்.