பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

259


மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் வேளாளர் குலத்தில் பிறந்த அரசஞ் சண்முகனார் இலக்கிய இலக்கணங்களிலும், சித்தம். சோதிடம் முதலிய துறைகளிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தார். இவர் சிறந்த திறனாய்வாளராய் விளங்கினார் என்பதற்கு, இவர் எழுதிய திருக்குறளாராய்ச்சியும், தொல்காப்பியப் பாயிரவிருத்தியும் சான்று பகர வல்லன. யாழ்ப்பாணத்திற் பிறந்து தமிழ்ப்புலவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியவர் திரு. கனகசுந்தரம்பிள்ளை . 'இல்லாண்மை' என்னும் நூலும், 'தமிழ் நாவலர் சரிதை'யும் இவர் இயற்றியனவே ஆகும். இவர் நூல்களைப் பிழையற அச்சிடுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். பின்னத்தூரிற் பிறந்த திரு. நாராயணசாமி ஜயர் அவர்கள், தம் சங்க இலக்கியப் பயிற்சி எல்லாம் விளங்க 'நற்றிணை'க்கு ஒரு நல்ல உரையினை ஆக்கியுள்ளார். தஞ்சை மாநகரில் வழக்கறிஞர் தொழில் நடத்திய திரு. கே. எஸ். ஸ்ரீநிவாச பிள்ளை, 'தமிழ் வரலாறு' என்னும் ஆராய்ச்சி நூலை அளித்துள்ளார்.

டாக்டர் உ. வே. சாமிநாதையர்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவராம் உத்தமதானபுரம் வே. சாமிநாத ஐயர் இன்று 'தமிழ்த் தாத்தா' என வழங்கப்படுகிறார். இவர் ஊர் ஊராகச் சென்று, செல்லுக்கும் கறையானுக்கும் இரையாகிக் கொண்டிருந்த ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி வந்து, அவைகளைத் திருத்தமான முறையில் பதிப்பித்தார். இவர் பதிப்பித்த நூல்களைவிரிக்கின் பெருகும். ஒவ்வொரு நூலினையும் உட்புகுந்து படித்து ஆழ்ந்த பொருள்களையெல்லாம் அரிதின் முயன்று கண்டு, நூற்பொருளைத் திறம்பட எளிய சொற்களால் புலப்படுத்துதல் இவருடைய தனிச்சிறப்பாகும். கதைச் சுருக்கம், பாடியவர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, மேற்கோள்கள், இன்ன பிற செய்திகள் எல்லாம் இவர் உரையில் துலங்கும்