பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

281


படிக்கப்பெற வேண்டும் என்று தமிழை உயர்த்தியவர் திரு. கா. நமசிவாய முதலியார். பள்ளி மாணவர்க்குப் பல பாடப் புத்தகங்களை எழுதியுள்ள இவர், தம் காலத்தில் புலவராயும், நாவலராயும் விளங்கினார்.

இயற்றமிழ்ப் புலவர்களாயும் ஆராய்ச்சியாளர்களாயும் சில தமிழ் அறிஞர்கள் விளங்கினார்கள். சேது சமஸ்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார், பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய தமிழ்ச் சங்கத்திற்கு ஊன்றுகோலாய் அமைந்தார். இவர் 'பாரி காதை' என்ற அழகிய செய்யுள் நூலினையும் படைத்துள்ளார். "தமிழ் வரலாறு" என்னும் அரிய ஆராய்ச்சி நூலையும், சேதுநாடும் தமிழும், வஞ்சிமா நகரம், புவியெழுபது. திருவடிமாலை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். கம்பராமாயணத்தில் உள்ளம் தோய்ந்து ஈடுபட்டவர் வெள்ளக்கால் திரு. சுப்பிரமணிய முதலியார், அகலிகை வெண்பா, கோம்பிவிருத்தம், சுவர்க்க நீக்கம், நெல்லைச் சிலேடைவெண்பா முதலிய இனிய செய்யுள் நூல்களையும், கம்பராமாயண இன்கவித் திரட்டு, இராமாயண உள்ளுறை பொருளும் தென் இந்தியச் சாதி வரலாறும் போன்ற அரிய நூல்களையும் இவர் தமிழகத்திற்குத் தந்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதியவர் திரு. எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை ஆவர்.

பண்டிதமணி

மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள், மகிபாலன்பட்டியிற் பிறந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய்த் திகழ்ந்தார். இருமொழிப் புலமை வாய்ந்த இவர், சுக்கிர நீதி என்னும் வடமொழி நூலினைத் தமிழாக்கினார். மிருச்சகடிகம் என்ற வடமொழி நூலை 'மண்ணியல் சிறு தோ்' என்று அழகு தமிழில் மொழிபெயர்த் தமைத்தார்; திருவாசகத்திற்கு அரிய உரையும் கண்டுள்ளார். உரைநடைக் கோவை, சுலோசனை, உதயணன் கதை முதலியனவும் இவர்