பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தமிழ் இலக்கிய வரலாறு

வாசகா் வரலாறும் காலமும், பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் முதலிய பல நூல்கள் இவர் அறிவுத் திறனை அறிவிக்கும். இவருடைய திருவாசக விரிவுரை நூலுக்கு அகலவுரை எழுதும் பேராற்றலையும், கோகிலாம்பாள் கடிதங்கள், நாகநாட்டரசி என்பன நாவல் எழுதும் பான்மையினையும், சாகுந்தலம் என்ற நாடகம் பிறமொழி நாடகத்தைத் தமிழ்ப்படுத்தும் நெறியினையும் உணர்த்துவன. திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலியன இவர் இயற்றிய செய்யுள் நூல்களாகும். 'அம்பிகாபதி அமராவதி'யும் இவருடைய படைப்பேயாம். 1950இல் இவர் இவ்வுலகை நீத்தார்.

திரு. வி. க.

திரு. வி. க. என்ற பெயர் தமிழ் நெஞ்சங்களில் வாழும் பெயர். திரு. வி. கலியாண சுந்தரனார் தமிழிற்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் உலகிற்கும் செய்த தொண்டுகள் அளவிறந்தன. இத் தமிழ்த் தென்றல், செந்தமிழ் நயந்தோன்ற சொற்பொழிவு ஆற்றுவதிலும், திட்பமும் நுட்பமும் விளங்கக் கட்டுரைகள் வரைவதிலும் நிகரற்றவராய் விளங்கினார். இவருடைய எழுதுகோல் எத்துறையிலும் தொண்டு செய்தது. சமரச நோக்கம் கொண்ட இத் தமிழ்ப் பெரியார், 'என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்றபடி அடக்கமான பணியினையும் அமைதியான வாழ்வினையும் மேற்கொண்டார். அரசியற் கருத்துகளை ஆங்கிலத்தில் மட்டுமின்றி அன்னை மொழியாம் தமிழிலும் உணர்த்த இயலும் என்பதைப் பத்திரிகைகள் வாயிலாகக் காட்டினார். இதற்கு இவருடைய தேசபக்தன், நவசக்தி இதழ்களே சான்றுகளாகும். சமயத் துறையில் தெளிந்த அறிவினைப் பெற்றிருந்தார். இவர் பல நூல்களைத் தமிழுலகிற்கு அளித்துள்ளார். முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இமயமலை அல்லது தியானம், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சைவத்திறவு, சைவத்தின் சமரசம், தமிழ்த்