பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. இக்காலம்

இக்காலத்தில் தமிழ் பல வகைகளில் முன்னேறி வருகிறது. இயல்துறையில் கவிஞர் பலர் தோன்றி நல்ல கவிதைகளை நம்மிடையே தந்துவிட்டுச் சென்றுள்ளனர்; தரமான கவிதைகளைத் தந்து கொண்டும் வருகின்றனர். அது போன்றே இசைத் துறையில் தமிழ் இசை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, கர்நாடக இசையின் பிடியிலிருந்து தமிழிசை மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இசை அரங்குகளில் தமிழ் முழங்குகின்றது. படிப்படியாகச் சிறப்பாக முறையாக வளர்ந்து வந்த நாடகத்துறை, இன்று திரைப்படத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், நாடகத்தைக் கண்டு களிக்கும் மக்களின் ஆர்வம் மட்டும் குறையா நிலையில் வளமாய் உள்ளது. மேலும், சிறுகதை, நாவல், பத்திரிகை போன்ற பிற துறைகள், நல்ல வேகமான வளர்ச்சியினைப் பெற்று வருகின்றன.

இயற்றமிழ்

பாரதியார்

இயல், இசை, நாடகம் என முப்பிரிவுகளையுடையது தமிழ். முதற்கண் இயற்றமிழ்க் கவிஞர்களைக் காண்போம். இந்தக் காலத்தைப் ‘பாரதியுகம்’ என்றார் அறிஞர் ஒருவர். "பாரதியார் எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்படப் போகின்ற கவிஞர்களின் சிரேஷ்டமானவர். பாரதியாரின் கவிதை உள்ளம். நவரஸங்கள் வழியாக வழிந்தோடி வெள்ளப் பெருகெடுத்திருப்பதை அவருடைய பாடல்சளில் காணலாம். கவிஞர்களில்,