பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தமிழ் இலக்கிய வரலாறு


பாரதியார் குறிப்பிடத்தக்கவர். இவர் பல நல்ல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

'தழிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை;
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!'

என்கிறார் கவியரசர் பாரதிதாசனார். பாரதியார் தம் கவிதை மூலம் என்றும் நம்மிடை வாழ்வார்.

தேசிகவிநாயகம் பிள்ளை

'தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ்மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு' என்று கவிமணியின் பாடலைப் புகழ்ந்து பேசுகிறார் ரசிகமணி டி. கே. சி. [1]

கவிமணியின் பாடலைப் பற்றிய புகழுரையைக் கண்டோம். கவிமணியின் உருவத்தைக் காண வேண்டாவா? நாமக்கல் கவிஞர் உரைக்கிறார், காண்போம்.

'துரும்பென பெலிந்த தேகம் துலங்கிடும் குளிர்ந்த பார்வை
இரும்பினும் வலிய உள்ளம் இனியவே செய்யும் எண்ணம்
பரம்பொருள் நினைவேகாட்டும் பாரெலாம் பரந்த நோக்கம்

கரும்பினும் இனிய சொற்கள் கவிமணி வடிவ மாகும்'.

கவிமணியின் முழு உருவமும் நம் மனக்கண்முன் வந்து நிற்கின்றதல்லவா?

'உள்ளத் துள்ளது கவிதை - இன்பது
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை'

இனி, கவிமணியின் பாடலைக் காண்போம்:


  1. திரு. டி. கே. சி, கண்ணாரக் காண ஒரு கவிஞர், கவிமணி நினைவு மலர், ப. 18