பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

தமிழ் இலக்கிய வரலாறு


பாரதியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது... 'பாடு' என்று பாரதியார் சொல்ல, 'எங்கெங்குங் காணினும் சக்தியடா' என்று பதினாறு சீருள்ள இரண்டு அடிகளைப் பாடினார். அதன் அழகும் பொருளும் அவரைப் பாரதிதாசன் என்று தமிழ் நாட்டிற்கு உணர்த்தின...(இது) பாரதியாராலேயே ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த - கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்றெழுதப்பட்டுச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது... பாரதிதாசன் அவர்கள், அடிநாள்முதலே சாதி பேதத்தையும் சமய பேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும், விரிந்த அறிவும், கொள்கைக்குப் போராடும் குணமும் கொண்டவர். பாரதிதாசன் அவர்கள் பாடிய அந்நாளைய கதர்ப்பாட்டுகளைப்போல இதுவரை யாரும் பாடியதில்லை, அவரது 'சுப்பிரமணியர் துதியமுது' என்ற நூலில் உள்ள 'கீர்த்தனங்கள்' கீர்த்தனாசிரியர்கட்கும் வழிகாட்டும் சிறப்புடையன. பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். அவரது சிறு குறிப்பு முதல், கட்டுரை கவிதைகள் வரை, அனைத்திலும் கருத்து, உணர்ச்சி, நகைச்சுவை இவைகளைப் பரக்கக் காணலாம்.[1]

இயற்கையை வருணிப்பதிலே பாரதிதாசன் இணையற்ற கவிஞர். இவருடைய 'அழகின் சிரிப்பு அனைவரும் பாராட்டிப் படிக்கும் நூலாகும். இயற்கையோடு நகைச்சுவையை இணைத்துப் பாடுகிறார்:

'கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக்

குதித்ததைப் போல்


கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதையெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால்

பார்க்கும்.

'

  1. பாரதிதாசன் கவிதைகள்-ஆசிரியரைப் பற்றி ப. V & VI.