பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

281


நம்மிடையே வாழ்ந்துவருகின்றது. 'பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா' என்றார் பாரதியார். அம்முறையில் தமிழ்க் கவிதை ஊற்று நில்லாமல் மேலும் மேலும் சுரந்துவருகின்றது. தெள்ளு தமிழில் தீஞ்சுவைகெழுமிய பாடல்களை இன்று வாழும் கவிஞர்கள் நமக்கு வடித்துத் தருகின்றனர். கொள்ளையின்பம் குலவும் கவிதை வழிக் காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பேராற்றின் வெள்ளப்பெருக்கினை அற்றுவிடாமல் பார்த்து வருகின்ற - தம் இதயச் சோலையில் நித்தம் நித்தம் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை நமக்கு அன்போடு, பண்போடு, உவகையோடு, உரிமையோடு படைத்து வருகின்ற இயற்றமிழ்வல்ல இன்தமிழ்க் கவிஞர் சிலரைக் காண்போம்.

சுவாமி சுத்தானந்த பாரதியார், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மோனத் தவமியற்றிவிட்டு, அடையாற்றில் வற்றாத கவிதைப் பணி ஆற்றினார். எண்ணற்ற கவிதைகளை இயற்றிய இவருடைய சிறந்த படைப்பு, 'பாரத சக்தி மகா காவியம்' என்பதாகும். 'யசோதரையும் சித்தார்த்தனும்' என்ற கவிதையில் வாழ்வின் நிலையாமையினையும், அதே நேரத்தில் உயிர்க்குலத்தின் தொடர்ந்த இயக்கத்தினையும் சிறப்புறப் பாடியுள்ளார்.

சித்தார்த்தன் :

'வாடி யுதிர்ந்த மலரைக் கண்டும்
வாழ்வை நம்பவோ - கண்ணே!
கோடி யுயிரைச் சாவு நாளும்

கொண்டு போகுதே!'

யசோதரை :

'உதிர்ந்த பூக்கள் உரம் தாகும்
உதிர்க்கும் புதுமலர்- கண்ணா!
முதிர்ந்த கனிகள் வீழ்ந்து விதைகள்

முளைப்ப தியற்கையே'