பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

தமிழ் இலக்கிய வரலாறு


'நாணல்' என்ற புனைபெயரில் ஆங்கிலமும் அருந்தமிழ்ப் புலமையும் கொண்டு கவிதைகள் புனைந்தவர் அ. சீனிவாச ராகவன் ஆவர். தத்துவக் கருத்துகள் இவர் பாடலில் இழையோடும். பாம்பும் பிடாரனும் என்ற கவிதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இவரது, 'வெள்ளைப் பறவை'... கவிதைத் தொகுதி சாதித்திய அகாதெமி பரிசு பெற்றது.

'ஜோதி' என்ற புனைபெயரில் மறைந்திருப்பவர் 'கலைமகள்' பத்திரிகையின் ஆசிரியரும், டாக்டர் உ.வே.சா அவர்களின் மாணவருமான திரு. கி. வா. ஜகந்நாதன் ஆவர். இவர் பாடிய பாடல்கள் 'மேகமண்டலம்' என்ற நூலாக வெளிவந்துள்ளது. பெரும்பாலும் இவர் தெய்வங்களின் மேலேயே பாக்கள் புனைந்து வருகின்றார். 'கவிஞன் கர்வம்' என்ற கவிதையில் கற்பனையின் சிறப்பினைக் காணலாம்.

'கற்பனை யாம்ப ரிக்கே - ஒரு
கடிவாளம் என்பதிலை
வெற்பினில் ஏறிவரும் - அந்த

விண்ணி லும்பறக்கும்'

என்று கூறியுள்ளமை மகிழத்தக்க தொன்றாகும்.

'சோமு' என்று அன்போடு வழங்கப்படும் திரு. மீ. ப. சோமசுந்தரம் அவர்கள், அனைத்திந்திய வானொலித் துறையில் தமிழ் நிகழ்ச்சிகளின் தலைவராய் பணியாற்றி வந்தவர்; இவர் தமிழில் வித்துவான் பட்டம் பெற்றவர். ஆங்கிலம், வடமொழி, இந்தி ஆகிய மொழிகளில் புலமை நிரம்பியவர். இவர் எழுதிய 'அக்கரைச் சீமையிலே' என்ற நூல் சாகித்திய அகாதெமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. இவருடைய 'இளவேனில்' எனும் கவிதைத் தொகுப்பு நூல், சென்னை அரசாங்கப் பரிசு பெற்றுள்ளது.