பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

203


'பூவில் நின்று சிரித்திடுவாள்- அவள்
பூங்கொடி தன்னில் ஆடிடுவாள்
காவில் வீசும் காற்றினிலே-இன்பக்

கண்ணிகள் பாடி உலவிடுவாள்'

என்று, கவிதை எனுமோர் பெண் தெய்வத்தினை - கவிஞர் பரவும் அருந்தெய்வத்தினைக் - கவிஞர் சோமுவும் பரவி நிற்கின்றார்.

திரு. ம. ப. பெரியசாமித் தூரன் அவர்கள், தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் பிரதம ஆசிரியராய் இருந்து நற்றமிழ்த் தொண்டு செய்தவர். இவர் கவிதைகள் 'தூரன் கவிதைகள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. மனத்தத்துவம் இவர் கவிதைகளின் உயிர்த்துடிப்பாய் அமைந்துள்ளதனைக் காணலாம்.

படிப்போர் நெஞ்சில் பாங்குற நிலைத்து நிற்கும் இவருடைய நிலவுக் கற்பனை வருமாறு:

'காதலனைச் சந்திக்கக் கதிர்மறைவில் வந்தகன்னி
பாதைமுனை அவன் வரவைப் பார்த்தங்கு புதர்ச்செறிவில் விளையாட்டாய்ப் போயொளிக்கும் வேளையிலே உளம்பொங்கி
முனைகாட்டும் புன்சிரிப்பை மோன வெளிநிலத்தில்
வீசிவிட்டுச் சென்றதுபோல் விளங்குகின்ற நிலாப்பிஞ்சே.'

தூரன் சிறுவர்களுக்கான கவிதைகள் எழுதித் தமிழ் நாடு அரசின் பரிசு பெற்றுள்ளார்.

புலவர் குழந்தை இந்த நூற்றாண்டின் பெரும் காவியமான 'இராவண காவியம்' வழங்கியவர். இராமாயணக் காவியத்தில் மனம் பறிகொடுத்த சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை போன்ற இராம பக்தியுள்ள பேராசிரியர்களாலும் புகழப்பெற்ற காவியம், 'இராவண காவியம்.' இதில் புலவர் இயற்றிய கவிதைகள் கம்பன் கவிதைகள் போலக் கற்றாரின் இதயத்தைக் களிப்புறச் செய்பவை.