பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

தமிழ் இலக்கிய வரலாறு


காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்ட இக் காவியம் தி.மு.க. ஆட்சியில் தடை நீங்கப்பெற்றுத் தமிழரிடை பவனி வந்தது. பல்கலைக் கழகப் பாடநூலிலும் இன்று இராவண காவியம் இடம் பெற்றுள்ளது. புலவர் குழந்தையின் கவியாற்றலை, காவியத்தின் பாயிரமாகிய தமிழ்த்தாய் வாழ்த்திலேயே காணலாம். தமிழின் இனிமையைக் குழந்தையின் தீங்கவிதை விளக்குவதைக் காண்க.

'இனித்த பாலினும் தேனினும் இன்சுவைக்
கனித்தொ கையினும் கட்டிக் கரும்பினும்
நினைத்த வாயும் சொல் நெஞ்சும் இனித்திடும்

தனித் தமிழ்ப்பெரும் தாயினைப் போற்றுவாம்.'

புலவர் குழந்தை இக் காவியம் தவிர 'காமஞ்சரி' என்னும் கவிதை நாடகத்தையும், 'குழந்தைப் பாடல்கள்' என்னும் கவிதைத் தொகுதியையும், 'கொங்கு நாடு' முதலான உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் கம்பதாசனின் இயற்பெயர் ராஜப்பா என்பதாகும். 'அருணோதயம்' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியரான இவர் ஏழை படும் பாட்டினைத் தம் கவிதைகளில் புலப்படுத்துதலில் வல்லவர். பிச்சைக்காரன் பாடுவதாக இவர் பாடியுள்ள பாடலில் அவலம் ஓலமிடுவதனைக் காணலாம்.

‘நதியிளைப் பாற ஆழியுண்டு - கொடும்
நஞ்சிளைப் பாற மருந்து முண்டு
கதிரிளைப் பாற இரவுமுண்டு-எங்கள்

கவலை இளைப்பாற உண்டோ இடம்?’

கவிஞர் வாணிதாசன் புதுவையில் வாழ்ந்தவராவர். தமிழிலும் பிரெஞ்சிலும் புலமை பெற்ற இவருடைய இயற் பெயர் 'எதிராஜ்' என்பதாகும். பாரதிதாசன் அவர்களை நன்கு அறிந்த இவர், அவரைப் போலவே சமுதாயச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர். 'கொடிமுல்லை',