பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

291


பைஞ்சோலை பாட்டிசைக்கும், வாழைப் பந்திப்
பசுங்குலைகள் செம்பொன்னாய்ப் பழுத்துத் தூங்கும்
எஞ்சாது தைப்பொங்கல் வருக என்றே

இன்புறும் செங்கரும்பைப் பாராய் பெண்ணே!

கவிஞர் என். எஸ். சிதம்பரம், இசை மரபு உணர்ந்த கவிஞர். இசைப் பாடல்கள் பல இவர்தம் படைப்புகளாகும். இவருடைய கவிதைகளில் சொற்கள் இயற்கையாக இணைந்து பொருளோடு செறிந்து இனிய உருவம் பெற்றுக் கருத்தில் ஒளியும் இன்பமும் ஊட்டும்படி அமைந்துள்ளன. 'இதயக் கோயில்' என்ற இவர்தம் கவிதைத் தொகுப்பு தெய்வ நலங்கெழுமிய அருட்பாடல்களின் தொகுப்பாகும்.

'இதயம் பதும பீடம் - அதனில்
இறையாம் சுடரைக் காணில்
உதயமாகும் ஞானம்! - அதனில்

ஒலிக்கும் தேவ கானம்'

என்னும் பாடல், தெய்வத்தைத் திருமுன்னர்க் கொணர்வதன்றோ? 'இசைக் கனிகள்', 'பாடும் கீதம் கேட்குது!', 'தமிசைப் பாடல்கள்', 'ஆத்மாஞ்சலி' முதலிய பல பாடல் தொகுதிகள் இவர்தம் அரிய படைப்புகளாகும். அமைதி தவழும் அருட் பாடல்கள் இவர்தம் கவிதைகள் எனலாம்.

கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, பேச்சுத் தமிழிலேயே எளிய சந்தங்களில் பாட்டுப் பாட வல்லவர். சான்றாக,

'பெரிய மனுஷன் புளுகினாக்க பேப்பரிலே போடுறான்;
சின்ன மனுஷன் புளுகினாக்க செயிலுக்குள்ளே போடுறான்;
கன்னக்கோலு களவடிச்சா கட்டி வச்சு வாங்குறான்;

கள்ளச் சந்தை காரங்கிட்டே கையால் பிச்சை வாங்குறான்'

என்ற பாடல் அடிகளைக் காட்டலாம். 'காந்தி மகான் கதை' இவருடைய அருமையான கவிதைப் படைப்பாகும்.