பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

தமிழ் இலக்கிய வரலாறு


கவிஞர் திரிலோக சீதாராம், பொங்கல் நன்னாளில் கீழ்த்திசையில் கதிரவன் ஒளி பரப்புவதைப் பாடியுள்ளார்.

'வெள்ளென்று கீழ்வானம் வெளிர ஒளியுலகுப்
புள்ளரையன் கோயில் புதுக்கோலம் கண்டிலிரோ?
துள்ளும் இரவின் துடுக்கடக்கி, தொல்புவியின்
கள்ளங் கரையக் கடுகிவரும் தேர்க்காலின்
வெள்ளம் சுழன்றெழுங்கால் வீசி விசும்பேறிப்

பள்ள மடைதிறந்தே பாயும் கருணையொளி'

என்று தம் 'பாமாலைத் தொகுப்பில்' கதிரவனின் கவினொளியை - இந்நிலவுலகின் கள்ளத்தைக் கரைக்கும் அறிவு ஒளியைக் காண்கின்றார்.

எஸ். கந்தசாமி என்ற இயற்பெயர் கொண்ட துறைவன், இந்திய வானொலித் துறையில் பணியாற்றித் தேனென இனிக்கும் கவிதைகள் தந்து சிறப்புற்றவராவர்.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் அரிய படைப்பு 'மலரும் உள்ளம்' என்பதாகும். குழந்தைக் கவிதையுலகில் தனியாட்சி செலுத்தும் இவர்,

'ஏடு தூக்கி இன்று பள்ளி செல்லும் செல்வரே

நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார்'

என்று கூறுகிறார். இவர் பாடலைப் படிக்காத தமிழ்க் குழந்தையே இல்லை எனச் சொல்வது மிகையன்று.

குழந்தை இலக்கியத் துறையில் சிறப்பிடம் பெறுபவர் கவிஞர் பூவண்ணன். குழந்தை இலக்கியத்துக்காகவே மத்திய மாநில அரசுகளிடமிருந்து பதின்மூன்று பரிசுகள் பெற்றுள்ளார். இவருடைய குழந்தைக் கவிதைகளின் தொகுதியான 'பாட்டுத் தோட்டம்' பரிசு பெற்றதே. இந்திய ஒருமைப்பாட்டை வற்புறுத்தும் இந்தியரே' என்னும் பாடல் கருத்து வளமும் கவிதை நலமும் சிறந்த பாடல்.