பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

297

னடியான், கலைவாணன், திருமதி செளந்தரா கைலாசம், ஜ்வாலா ஜயராம், சீதா என்பவர் ஆவர்.

'கவியரங்கக் கவிஞர்கள்' என்று, கலைஞர் கவிஞர் கருணாநிதி தலைமையில் ஒரு கவிஞர் படையே உளது. முருகுசுந்தரம், ஈரோடு தமிழன்பன், மீ. இராஜேந்திரன், அப்துல் ரகுமான், பொன்னி வளவன், தமிழண்ணல், முத்துலிங்கம், கருணானந்தம் முதலான கவிஞர் பலர் வேகமும், விறுவிறுப்பும் சுவையும் சிந்தனைச் செறிவும் நிறைந்த கவிதைகளை வடித்துத் தந்து மக்களின் ஒரு முகமான பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார்கள்.

சுருங்கச் சொன்னால் இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள், புதிய வடிவிலும் பொருளிலும் நடைபோடுகின்றன எனக் கூறலாம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் கவிதை, உணர்ச்சிச் செறிவும் கருத்தாழமும் நிறைந்ததாகும். எடுத்துக்காட்டு வருமாறு:

'பிறையொன்று பொறுத்திருந்து நிலவாகும்
பொறைகொண்டார் பொறுத்திருந்து நிலமாள்வார்
இரையொன்று வருமட்டும் காத்திருக்கும் கொக்கு
அதனைப் பொறையென்று சொல்லாதீர்

தரைமீது அப்பறவை கற்ற சூழ்ச்சி

கண் அடக்கம் இமைக்கதவில்
'நாவடக்கம் வாய்ச்சிறையில்
மூச்சடக்கம் காற்றினிலே
மெய் அடக்கம் கல்லறையில் - நல்ல
மன அடக்கம் அறிவொளியில்.

காற்றின் பெருக்கல் புயலாகும்
நாற்றின் பெருக்கல் பயிராகும் - இனிய
சாற்றின் பெருக்கல் சுவையாகும்
ஆற்றின் பெருக்கல் புனலாகும்.