பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

தமிழ் இலக்கிய வரலாறு


முருகு சுந்தரம்

பாவேந்தர் பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் கவிஞர் முருகு சுந்தரம். 'கடைத்திறப்பு', 'சந்தனப் பேழை', 'பனித்துளிகள்' ஆகியவை இவருடைய கவிதைத் தொகுதிகள். இவற்றுள் 'பனித்துளிகள்' 1971இல் தமிழக அரசின் கவிதைக்கான முதற் பரிசு பெற்றுள்ளது, இவர் கவிதைகளுள் ஒரு பகுதி காண்க.

(குழந்தை )

'உழுதொழில் உழவன் ஓர் நாள்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கப்
பழந்தமிழ்ப் புதையல் ஒன்றைப்
படைச்சாலில் பெற்ற தைப்போல்
அருந்தொழிற் குழந்தை பெற்றேன்
அன்னமே! சொல்லப் போனால்
குழத்தையும் புதையல் என்று

கொள்வதில் குற்ற மில்லை!'

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தோற்றுவாய்

தான் அனுபவித்த ஓர் உணர்ச்சியை அப்படியே பிறரும் அனுபவிக்கத் தூண்டும் உள்ளத்தின் வெளிப்பாடே கலை. உள்ளதை உள்ளவாறே உரைக்காமல், உள்ளதை உணர்ந்தவாறு உரைக்கும் உன்னதக் கலை கவிதைக்கலை. இலக்கிய வடிவங்களுள் மிகத் தொன்மையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவதும் கவிதைக் கலையே. ஏறத்தாழ ஈறாயிரம் ஆண்டுக்கால வரலாற்றுச் சிறப்பினையுடைய இக்கவிதைக்கலை காலமாறுபாட்டால் உருவத்