பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

313


இவற்றையெல்லாம் கண்டு புதுகவிதையில் பாலும். பாலுறவும், நிராசையும் மட்டுமே இடம் பெறுகின்றன, சமூகப் பின்னணி ஒன்றும் அதில் இடம் பெறவில்லை என்று கூறுதல் இயலாது.

நாங்கள் சேற்றில்
கால் வைக்காவிட்டால்
நீங்கள் சோற்றில்
கை வைக்க முடியாது

என்ற கவிதை, ஏழை உழவனின் உள்ளக் குமுறலாக வெளி வருகிறது.

நடை பாதையைப் பற்றி நா. காமராசன் குறிப்பிடும் போது,

ஏழைகள் உறங்கிட
இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட புழுதிக்கட்டில்

எனச் சுட்டுகின்றார். இக் கவிதை அவரது சமுதாயப் பார்வைக்கு நல்லதோர் காட்டு.

ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன

என வறுமையின் கொடுமையைப் படம்பிடிக்கிறார் இரா. வைரமுத்து.

முடிவாகக் காணும்போது, புதுக்கவிதையின் பாடு பொருள் மிகவிரிவானது. அதில் சமூக உணர்வும் உண்டு; பால், பாலுறவு, நிராசை போன்றவை இடம்பெற்ற வெற்றுக் கவிதைகளும் உண்டு. எனவே, பாடுபொருள்களில் சிலவற்றை மட்டும் கண்டுவிட்டுப் புதுக்கவிதைகளை எதிர்ப்பது பொருத்தமுடைத்தன்று.