பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

317


என்ற கவிதையில் பேச்சு வழக்கின் முழு அமைதியைக் காணமுடிகிறது. கோடிக்கணக்கான பாட்டாளி மக்களின் ஏழ்மைக் கோலமும், பட்டினிக் கொடுமையும் நிழலுருவமாக நம்முன் காட்சி அளிக்கின்றன.

நாங்கள் சேற்றில்
கால் வைத்தால் தான்
நீங்கள் சோற்றில்
கைவைக்க முடியும்

என்ற நகரத்தவர்களின் ஆடம்பர வாழ்வை இடித்துக் காட்டும் போக்கில் அமைந்த கிராமியக் கவிதையிலும் பேச்சு வழக்கின் இறுக்கத்தைக் காணலாம்.

பாரதியின் சர்வதேசியப் பார்வையை மீண்டும் தமிழ்க் கவிதைக்கு வழங்கியவர்களில் இன்குலாப்ஒருவர். 'கிரெளஞ்ச வதத்திற்குக் கேள்விகள் இல்லையா?' என்ற புதுக்கவிதையில் அமைந்த,

இந்தக் குருச்சேத்திரத்தில் எங்கள் கைகள்
ஆயுதங்களைக் கீழே போடவில்லை
மாறாக
எங்கள் கைகளில் தான் ஆயுதங்கள் இல்லை

என்ற வரிகள் விடுதலை பெறப் போராடும் ஒவ்வொரு நாட்டின் ஆத்ம தாகத்தையும் எதிரொலிக்கின்றன.

கண்மூடும்போது கனவுகள் சுரண்டின
கண்விழித்தபோது கனவான்கள் சுரண்டினர்
இருட்டறையில் வேர்த்துக் கிடக்கும் நாம்
இனிமேல் திறக்கப்போவது
சன்னல்களை யல்ல
கதவுகளையே