பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம் 333


முதலிடம் தரப்பட்டிருக்கும். "ஒரே நாள் இரவில் நான்கு மணிநேரம் நடைபெறக்கூடிய ஒரே நாடகம் முழுவதையும் அடித்தல் திருத்தல் இல்லாமல் பாடல்கள், வசனங்களோடு எழுதி முடித்த மகத்தான தெய்வீக ஆற்றல் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். சுவாமிகள் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலைவளர்ச்சிக்கு, ' அடிப்படைச் செல்வங்கள்' என்று சொல்லலாம்.[1]

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடகத்தின் மூலம் தம் கருத்திற்கு வடிவம் தந்து. தம் கொள்கைக்கு விளக்கம் தந்து ஆட்சிபீடத்தையே நாடகத்தின் மூலம் பிடித்த பெருமைக்கு உரியவர் ஆவர். 'நாடகமாடிகள்' என்று ஏச்சுக்கும் பேச்சுக்கும் கலைஞர்கள் ஆளாகியிருந்தபொழுது அரசியல், சமுதாய சீர்திருத்த நாடகங்களை எழுதி மக்களிடையே ஒரு புரட்சியினையும், சிந்தனைக் கிளர்ச்சியினையும் உண்டாக்கி, அதன் விளைவாக மக்கள் மன்றத்திலேயே ஒரு மறுமலர்ச்சியினை உருவாக்கிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களையே சாரும். சம்பவங்கள் ஓர் இரவிற்குள்ளேயே முடிந்துவிடும் கதையமைப்புக் கொண்ட 'ஓர் இரவு' என்னும் நாடகத்தைப் பார்த்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இவரைத் தென்னாட்டுப் பெர்னார்டுஷா' என்று பாராட்டியுள்ளார். 'நீதிதேவன் மயக்கம்' சிந்தனையாற்றலைத் தூண்டிவிடுவதாகும்; நாடக உலகின் தனிச்சிறப்புப் பெற்றது, கம்பராமாயணத் திறனாய்வுக்கே அண்ணா நாடகம் வடிவம் தந்தது பிறர் செய்யாத அருஞ் செயல். அண்ணா தீட்டிய ஒப்பற்ற வரலாற்று நாடகம் சந்திர மோகன். இந்நாடகத்தில் இவரே குல்லூகபட்டராகத் தோன்றி நடித்தார். 'வேலைக்காரி' ஒரு சமூக சீர்திருத்த நாடகம். கருணாகரத் தொண்டைமானை மையமாக


  1. திரு. டி. கே. சண்முகம், தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி, மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர், ப, 223