பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

தமிழ் இலக்கிய வரலாறு


வைத்துப் பின்னப்பட்ட நாவல் 'கலிங்க ராணி' யாகும். இந்த வரலாற்று நிலைக்களனையே பின்னர் ஜெகசிற்பியன் ‘மதுராந்தகி' என்றும், கோவி.மணிசேகரன் 'செம்பியன் செல்வி' என்றும், சாண்டில்யன் 'கடல் புறா' என்றும் தம் கற்பனையைக் கூட்டி விரித்துப் பெரிய புதினமாக எழுதினார்.

நாடக உலகிற்கு அண்ணா ஆற்றிய அருந்தொண்டுகள் அளப்பிலவாகும்.

இன்று திரைப்படத்தோடு நாடகம் போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது குறைந்த செலவில் இன்பமாகத் திரைப்படத்தினை மக்கள் பார்க்க இயல்வதால் நாடகம் முன்போல் நல்ல செல்வாக்கினை மக்களிடையில் பெற வாய்ப்பில்லை. ஆயினும், இந் நூற்றாண்டில் பல நாடக, ஆசிரியர் வாழ்கின்றனர். பல நாடக மன்றங்கள் தங்கள் தொண்டினை இத் துறைக்குச் செலுத்தி உயிரூட்டி வருகின்றன.

நாடகத்தமிழின் இன்றைய நிலை

இன்று நாடகம் நல்ல முறையில் வளர்ந்துவருகின்றது. திரு. பி. எஸ். ராமையா அவர்கள் எழுதிய 'தேரோட்டி மகன்', 'டாக்டருக்கு மருந்து' ஆகிய நாடகங்களும் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள் எழுதிய 'தில்லை நாயகம்' முதலிய நாடகமும் திரு. சகஸ்ரநாமம் அவர்கள் நடத்தும் 'சேவா ஸ்டேஜ்' குழுவினரால் நடத்தப்படுகின்றன. டி. கே. எஸ். சகோதரர்கள் கல்கியின் 'சிவகாமியின் சபத'த்தினை அரங்கேற்றித் திறம்பட நடித்தனர். இதனை நாடக ஆக்கம் செய்தவர் கவிஞர் புத்தனேரி ரா. சுப்பிரமணியன் ஆவர். 'காதல்' ஆசிரியர் திரு. அரு. இராமநாதன் எழுதிய 'ராஜராஜ சோழன்' இக் குழுவினரின் புகழ்மிக்க நாடகமாகும். 'அப்பாவின் ஆசை' என்ற சிறுவர் நாடகத்தையும் அரங்கேற்றினர்.