பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ் இலக்கிய வரலாறு

அனைத்தும் குற்றமற்ற குறிக்கோள் இலக்கியங்களாய் முகிழ்த்தன.

முதற் பொருள்

மக்கள் வாழ்க்கையில் ஒழுகிய பல்வேறு நெறிகட்கும் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகட்கும் தொடர்புகண்டு புதிய ஓர் இலக்கிய மரபினைத் தோற்றுவித்தவர் தொல்காப்பியனாராவர். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை எனவும், வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் எனவும் கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் எனவும், முல்லையும் குறிஞ்சியும் திரிந்த வளம் குறைந்த இடம் பாலை எனவும் வழங்கப்பட்டன. இந்த ஐவகை நிலத்திலும்,

'முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்'

என்னும் சிலப்பதிகார அடிகளால் பாலை நிலத்தின் தன்மையினை அறிகிறோம்.

கரு உரிப் பொருள்கள்

ஐவகை நிலமும் அறுவகைப் பெரும்பொழுதும் சிறு பொழுதும் முதற்பொருள் என்றும், தெய்வம் முதல் யாழ் ஈறான பதினான்கும் கருப்பொருள் என்றும், குறிஞ்சிக்குக் கூடலும் கூடல் நிமித்தமும், முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதத்திற்கு ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தலுக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருள்கள் என்றும் கொள்ளப்பட்டன. இதனால்தான் பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்கையை வருணித்தாலும் மக்களுடைய வாழ்வே அதன் உட்பொருளாக - உரிப்பொருளாக விளங்குவதைக் காணலாம். எனவேதான் இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என்கிறோம்.