பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

351


வரும் சிவகாமி கற்பனைப் பாத்திரமேயானாலும், நெஞ்சை விட்டு என்றென்றும் அகலாத நினைவுப் பாத்திரமாகும். சோழர்களின் பொற்காலத்தையொட்டி எழுந்த மிகச்சிறந்த புதினம் 'பொன்னியின் செல்வன்', கல்கியில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் வாரந்தோறும் தொடர்கதையாக வந்த இந்த நாவல், மிக அரிய படைப்பாகும். இக் கதையில் வரும் 'நந்தினி' என்னும் பாத்திரம் போன்ற பாத்திரப் படைப்பு இதுவரை எழுத்தாளர்கள் படைத்து உலவவிட்ட பாத்திரங்களில் மணிமுடியான பாத்திரமாகும். புரியக்கூடிய எளிய தமிழில் (ஜனரஞ்சகம்) எழுதி, வாசகர்களின் நெஞ்சங்களையெல்லாம் கொள்ளை கொண்ட இவர், இன்று நம்மிடையே இல்லை.

வரலாற்றுப் புதினங்கள்

கல்கியை அடியொற்றிப் பலர் சரித்திர நாவல்களை எழுதி வருகின்றனர். இத்துறையில் சாண்டில்யன் குமுதம் பத்திரிகை மூலம் எண்ணற்ற வாசகர்களைப் பெற்று முன்னணியில் நிற்கிறார். இவருடைய தொடக்கக்கால நாவல்களான 'மலைவாச'லும் 'ஜீவபூமி' யும் என்றும் வாழும் தகுதிபடைத்த நாவல்களாகும். சுவை பயக்கச் சொல்லப்பட்ட நாவல்கள் இவை எனலாம். இவர் எழுதும் நாவல்களின் அத்தியாயங்களின் முதல் தொடர் (வாக்கியம்) மிகவும் நீண்டனவாக இருக்கும். சுற்றிச்சுற்றி வரும். குமுதத்தில் இவர் எழுதிய கன்னி மாடம், மன்னன் மகள், யவன ராணி, கடல்புறா, ஜலதீபம் முதலிய தொடர்கதைகள் அலுப்புத் தட்டாமல் படிக்கக்கூடிய வகையில் அகச்சுவையும் புறச்சுவையும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் அமைந்துள்ளன. இவரது 'ராஜபேரிகை' என்னும் ராபர்ட் கிளைவ் பற்றிய வரலாற்று நாவலை, கல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா பரிஷத் என்னும் அமைப்பு 1981 இல் சிறந்த தமிழ் இலக்கியம் எனத் தேர்ந்தெடுத்து, ரூபாய் பதினோராயிரம் பரிசளித்துள்ளது.