பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

தமிழ் இலக்கிய வரலாறு


மற்ற எல்லோரைக் காட்டிலும் வரலாற்று நூல்களை மிகவும் அக்கறையோடும் நுணுக்கமாகவும் ஆர்வத்தோடும் படித்து, நாவல்கள் சமைப்பவர் கோவி.மணிசேகரன். 'செம்பியன் செல்வி', கலிங்கத்துப் பரணியினை அடியொற்றி எழுதப்பட்ட சுவை மிகுந்த புதினம். களப்பிரர் காலத்தையொட்டியெழுந்தது 'முகிலில் முளைத்த முகம்', 'பொற்காலப் பூம்பாவை' விசயநகர வேந்தர்காலச் சூழ்நிலையில் படைக்கப்பட்ட அருமையான புதினமாகும். 'பொன் வேய்ந்த பெருமாள்' தமிழ்ச் சூழ்நிலையில் நடமாடும் நல்ல புதினமாகும். இவர் எழுதிய 'சந்திரோதயம்' நினைவில் நிற்கும் புதினமாகும். தட்சண பயங்கரன், சேரன் குலக் கொடி, சுமித்திரை, அசோகன், செஞ்சி அபரஞ்சி, குடவாயிற் கோட்டம், தென்றல் காற்று எனும் ரஷ்ய சரித்திரப் புதினம், காஞ்சிக் கதிரவன், ரத்த ஞாயிறு, அஜாத சத்ரு ஆகியவை இவர் எழுதிய நல்ல வரலாற்றுப் புதினங்களாகும்.

அகிலன் எழுதிய 'வேங்கையின் மைந்தன்' ஓர் உயரிய படைப்பு. இந்நூல் சாகித்திய அகாதெமியின் ஐயாயிர ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. சோழர் காலச் சூழ்நிலையில் எழுந்த இந்நாவலில் வரும் "ரோகிணி' என்னும் கற்பனைப் பாத்திரம் கனவிலும் நினைவிலும் நிழலாடுகின்றது 'கயல் விழி', 'வெற்றித் திருநகர்' இவர் எழுதிய பிற சிறந்த வரலாற்றுப் புதினங்களாகும்.

ஜெகசிற்பியன், ஆனந்த விகடன் நாவல் பரிசுப் போட்டியில் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைத் தம்முடைய ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் வரலாற்று நாவலுக்காகப் பெற்றார். படிக்கப் படிக்கச் சுவையும் திடீர்த் திருப்பமும் கொண்ட நாவல் இது. மேலும், இவர் நாயகி நற்சோணை, ஆலவாய் அழகன், மகர யாழ் மங்கை, பத்தினிக் கோட்டம் முதலிய நாவல்களையும் வடித்துள்ளார். காதல் ஆசிரியர் அரு. இராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' மிகச்சிறந்த படைப்பாகும். இக் காதையில் வரும் ஊர்மிளா, வீரசேகரன், ஜன நாதன் மறக்க முடியாத பாத்திரங்கள். இவருடைய 'அசோகன்