பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

தமிழ் இலக்கிய வரலாறு


கல்கி நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற நாவல் உமாசந்திரன் எழுதிய 'முள்ளும் மலரும்' என்பதாகும், இரண்டாவது பரிசு பெற்ற நாவல் ர. சு. நல்லபெருமாள் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' என்பதாகும். மூன்றாவது பரிசு ஏ. எஸ். ராகவன் எழுதிய 'யாத்திரை' நாவலுக்குக் கிட்டியது. ஆனந்த விகடன் பொன் விழாவை ஒட்டி நடத்திய போட்டியில் கிருஷ்ண மணி எழுதிய 'வேர்கள்' சமூக நாவல் பரிசு பெற்றது. வையவனின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்னும் நாவல் பரிசு பெற்றுள்ளது.

அண்மைக்கால நாவல்கள்

இனக் கவர்ச்சி ஊட்டி ஒரு புதுமைப் போக்கில் அழைத்துச் செல்லும் ஜெயகாந்தனின் 'பாரிஸுக்குப் போ' புதினமும், ஒரு நடிகையையும் ஒரு பத்திரிகையாளனையும் வைத்துப் புதுமுறையில் பின்னப்பட்ட ஒரு தனி நோக்கு கொண்ட 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற நவீனமும், கல்லூரி வாழ்வில் கற்பிழந்த பெண்ணின் பிற்கால வாழ்வை விளக்கும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலும், இந்நாவலின் தொடர்ச்சியாக எழுதிய 'கங்கை எங்கே போகிறாள்?' என்னும் நாவலும் சிறந்தவை. ஓவியன் ஒருவனைப் பாத்திரமாகக் கொண்டு உயரிய கற்பனையை அவனைச் சுற்றி ஓடவிட்ட கதையமைப்புக் கொண்ட ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு பெற்ற அகிலனின் 'சித்திரப்பாவை'யும், எளிய தமிழில் புரட்சி முறையில் சுவை ததும்பப் புனையப் பெற்ற மணியனின் 'மோகம் முப்பது வருஷம்' என்னும் புதினமும், புதுமைப் பெண் ஒருத்தியை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கி. ராஜேந்திரனின் 'சாருலதா'வும், மனத்தத்துவத்தைப் புகுத்தி எழுதும் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் 'அமுதமாகி வருக'வும் பெரிய இடத்துப் பிரச்சினைகளையும் வாழ்வையுமே தம் புதினத்தில் சித்திரிக்கும் எஸ். ஏ. பி.யின் 'பிறந்த நாள்' புதினமும்,