பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

364


ஒரு புளியமரத்தின் கதை

வ. வே. சு. ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' சிறு கதைகளில் புகழ்பெற்றதுபோல, 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவல் உலகில் நற்புகழ் பெற்றது. தரமான சிறு கதைகளைத் தந்து புகழ் கொண்ட சுந்தர ராமசாமி 1966 இல் இதை வழங்கி நாவலாசிரியராக உயர்வு பெற்றார்.

இந் நாவலின் முக்கிய கதாபாத்திரம் புளியமரம். நான்கு நெடுங்கதைகள் இந்தப் புளியமரத்தைச் சுற்றிப் பின்னப்படுகின்றன. தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குச் சமுதாயக் காரணங்களைக் கண்டுபிடித்துப் புகுத்தும் இன்றைய அரசியல் நோக்கு, பழைய தலைமுறைகளில் படிந்திருப்பதை இந்த நாவல் படம் பிடிக்கிறது. ஓவ்வொரு கதையின் இறுதியிலும் புளியமரத்துக்கு அழிவு ஏற்படும் நிலை வருகிறது. இறுதியில் பல தலைமுறைகள் கண்ட, பலவகை வாழ்க்கையைக் கண்ட புளியமரம் அழிக்கப்படுகிறது. திருநெல்வேலி வட்டார வழக்கில் எழுதப்பட்ட இந் நாவலின் உத்தி, இதுவரை வேறு யாரும் பயன்படுத்தாத ஒன்றாகும்.

தலைமுறைகள்

நீல பத்மநாபன் எழுதி, 1968 இல் வெளிவந்த 'தலைமுறைகள்', நாவல் உலகில் ஒரு பெரும் சாதனை.

கதை இரணியல் செட்டியார்களில் ஒருவரான மூக்காண்டிச் செட்டியாரின் பரம்பரையைப் பற்றியது. சுமார் எழுபதாண்டுக் கதையை, திரவி என்னும் கதை மாந்தன் தன் பத்தாண்டுக்கால வாழ்வு மூலம் சொல்லிச் செல்வதாக ஆசிரியர் கதையை அமைக்கிறார். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து செட்டியார்கள், இரணியல் முதலிய பகுதிகளில் குடியேறிய பிறகு, அவர்களது உடை, நடை, மொழி முதலியன பெற்ற மாற்றங்களைச் சுவையாகச் சொல்கிறது நாவல். இரணியல் செட்டியார் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், அன்றாடச் செயல் முறைகள், சடங்கு