பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

தமிழ் இலக்கிய வரலாறு


தெள்ளிய உரையினைக் கண்டுள்ளார். மறைமலையடிகள், திருவாசக விரிவுரையினை எழுதியுள்ளார். பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் 'திருவாசகக் கதிர்மணி விளக்கம்' என்றோர் அரிய நூலினைத் திருவாசகத்திற்கு உரையாக வெளியிட்டுள்ளார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் நற்றிணைக்கு ஓர் அழகிய உரை கண்டுள்ளார். உ. வே. சா. அவர்கள் குறுந்தொகை உரையினையும், மணிமேகலை உரைக்குறிப்பினையும் செய்துள்ளார். அகநானூற்றிற்கு உரை கண்டவர்கள் ந. மு. வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையும்மாவர். சிலப்பதிகாரம் முழுமைக்கும் நாட்டார் அவர்களும், புகார்க் காண்டத்திற்கு மட்டும் சர். ஆர். கே. எஸ். அவர்களும் நல்ல உரை கண்டுள்ளனர். பதிற்றுப்பத்திற்கும், புறநானூற்றிற்கும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் உரை எழுதியுள்ளார். திரு. வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் அவர்கள் கம்பராமாயணம், வில்லிபாரதம், திருக்குறள், பத்துப்பாட்டில் சில பாட்டுகள் முதலியனவற்றிற்குத் திண்ணிய உரை வகுத்துள்ளார். டாக்டர் மு. வ. அவர்கள் திருக்குறளுக்கு ஒரு தெளிவுரையினை எழுதியுள்ளார். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வாயிலாகப் பல இலக்கியங்களுக்கு உரை எழுதப்பெற்று நூல்கள் வெளிவருகின்றன.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை, கலிங்கத்துப்பரணி முதலான நூல்களுக்குப் புலியூர்க் கேசிகன் தெளிந்த உரை கண்டுள்ளார். மற்றும் முத்தொள்ளாயிரம், நாலடியார் முதலான நூல்களுக்கும் அறிஞர் பெருமக்கள் சிலரால் நல்ல உரை காணப்பட்டுள்ளது.

வழிச்செலவு நூல்கள்

'எனது இலங்கைச் செலவு' என்று திரு. வி. க. எழுதிய கட்டுரை, இத்துறைக்கு ஆக்கத்தினை அளித்தது. உலகம்