பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

377


பாய் அமைந்தது. மறைந்த பேராசிரியர் ஆ. முத்துசிவன் அவர்கள் எழுதிய 'கவிதை', 'அசோகவனம்.', 'அசலும் நகலும்' என்னும் நூல்கள் நல்ல திறனாய்வு நூல்களாய் அமைந்தன அடுத்து பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்', 'இலக்கியக் கலை' ஆகிய இரண்டு நூல்களும் தனி மதிப்பினைப் பெறுகின்றன. பின்னது பாடப் புத்தகமாகவும் பயன்படுகிறது. திரு. மார்க்கபந்து சர்மா அவர்களின் 'சிலப்பதிகார ரசனை' மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சிப்போக்கில் அமைந்துள்ளது. டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் 'இலக்கிய ஆராய்ச்சி' இலக்கியத்திறனை ஆயும் அளவுகோலாகப் பயன்படுகிறது. அவர் எழுதி வெளிவந்துள்ள நூல்களாம் 'இலக்கியத்திறன்' 'இலக்கிய மரபு' என்பன. இத்துறை நூல்களில் மணிமுடியாய் விளங்குகின்றன. டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின் 'இலக்கிய இயல் அ. ஆ' எனும் நூல் புதிய உத்தி முறையில் எழுதப்பட்ட நூலாகும்.

டாக்டர் கைலாசபதியின் நூல்கள் ஈண்டுக் கருதத் தக்கனவாகும்.

இவ்வாறு பல்வேறு துறைகளிலும் இந்நாளில் அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழியானது வளர்ந்து செழித்து நிற்கின்றது. பல்கலைக்கழகப் பயிற்று மொழியாகவும், நீதித்துறைக்கு ஏற்ற மொழியாகவும் தமிழ் விரைவில் முற்ற அமையப்போகும் இனிய நிலையினைக் காணும்போது, தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்கின்றன; தமிழ் வாழ நாமும் வாழ்ந்து, தமிழ் உயர நாமும் உயர்வோம்!