பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

தமிழ் இலக்கிய வரலாறு


புள்ளியில்லாமல் எழுதினர். 'கொள' என்று ஏட்டில் இருந் தால் அதைக் 'கொள, கோள, கொள் கோள்; என்று பல வகையில் படிக்க இடமிருந்தது. ஏட்டுப் பிரதியைப் பார்த்து எழுதும்போது பிழைகள் ஏற்பட்டன. இவற்றால் பாட பேதங்கள் மிகுந்தன. சுவடி படிப்பது, எழுதுவது ஆகிய இவ்விரு செயல்களில் ஏற்படக்கூடிய பிழைகளை உணர்ந்தே, 'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்னும் பழமொழியும் ஏற்பட்டது.

ஓலையில் எழுதுவதும் கடினமாய் இருந்தமையால், எதையும் - சுருக்கமாக எழுதும் வழக்கத்தைத் தமிழர் கைக்கொண்டனர். அதனால் சுருங்கச் சொல்வதற்கேற்ற கவிதையை ஏற்று, விரித்துச் கொல்லும் உரைநடையைப் புறக்கணித்தனர். அதனால், உரைநடை வளம் பெறாமல் ஒடுங்கியது.

மேற்சொன்ன எழுது முறையின் இன்னல்களை நீக்கும் நன்மருந்தாக அச்சு இயந்திரம் வந்தது. ஒரு நூலை அச்சு இயந்திரத்தின் மூலம் எத்தனை படிகள் வேண்டுமானாலும் அச்சிடலாம். ஒரு படிக்கும் மற்றொரு படிக்கும் வேறுபாடு இருக்காது. அதாவது பாடபேதங்கள் ஏற்படாது. புள்ளி நீக்கி எழுத வேண்டிய அவசியமும் அச்சு நூலுக்கில்லை. அச்சிடுவது எளிது என்பதால், எதையும் சுருக்கமாகக் கவிதையில் எழுதவேண்டிய அவசியமின்றித் தெளிவாக, விளக்கமாக உரைநடையில் எழுதி அச்சிட்டனர். மக்களிடையே கல்வி எளிதில் பரவவும், நூல்கள் மிகுதியாக வெளிவரவும் பெருந்துணை புரிந்த அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் நாட்டிற்கு அச்சு இயந்திரம் வரும் முன்னரே, ஐரோப்பிய நாடுகளில் தமிழ் அச்செழுத்துக்களை உருவாக்கிப் பல தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டன. இந்திய மொழிகளில் அச்சுப் புத்தகத்தை முதலில் பெற்றது தமிழ்மொழியே. பிறகு தான் மற்ற மொழிகளில் அச்சு நூல்கள் ஏற்பட்டன.